போலி புகைப்படங்கள் கொண்ட வாக்குகளை நீக்குவதற்கு மென்பொருள் இருந்தும் தேர்தல் ஆணையம் ஏன் பயன்படுத்துவதில்லை?: ராகுல் காந்தி கேள்வி!
டெல்லி: 2க்கு மேல் பதிவான வாக்குகளை அழிக்கும் மென்பொருள் தேர்தல் ஆணையத்திடம் உள்ளது, அதை ஏன் பயன்படுத்தவில்லை என பல ஆயிரம் பக்க ஆவணங்களை வெளியிட்டு தேர்தல் ஆணையத்துக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஹரியானாவில் பெண் புகைப்படத்துடன் கூடிய ஆண் வாக்காளர் வாக்குப் பதிவு செய்தது அம்பலமாகி உள்ளது. ஒரே புகைப்படத்துடன் வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு வயதில் வாக்காளர்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஒரே புகைப்படத்துடன் 2 வாக்குச்சாவடியில் மட்டும் 223 வாக்காளர்கள் வாக்கு செலுத்தியுள்ளனர். முறைகேட்டை மறைக்கவே வாக்குச்சாவடியில் உள்ள சிசிடிவியை
அழித்துள்ளனர். ஹரியானாவில் 1.24 லட்சம் வாக்காளர்களுக்கு போலி புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
2க்கு மேல் பதிவான வாக்குகளை அழிக்கும் மென்பொருள் தேர்தல் ஆணையத்திடம் உள்ளது, அதை ஏன் பயன்படுத்தவில்லை. தேவையான மென்பொருள் இருந்தும் தேர்தல் ஆணையம் போலி வாக்காளர்களை நீக்கவில்லை. ஆயிரக்கணக்கான வாக்காளர்களுக்கு உ.பி.யிலும் ஹரியானாவிலும் வாக்கு உள்ளது. உத்தரப்பிரதேச அமைச்சர் லட்சுமி நாராயணனுடன் இருக்கும் தால்சந்துக்கு ஹரியானாவில் வாக்கு உள்ளது. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக தலைவர்களுக்கு நெருக்கமான பலருக்கு ஹரியானாவிலும் வாக்கு உள்ளது. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான வாக்காளர்கள் ஹரியானாவிலும் சென்று வாக்களித்துள்ளனர்.
உத்தரப் பிரதேசம் மதுரா மாவட்டத்திலும் ஹரியானாவில் ஹோடல் தொகுதியிலும் ஒரே பாஜக நிர்வாகிக்கு வாக்கு உள்ளது. 93,000 வாக்காளர்களுக்கு வீட்டு முகவரியே இல்லை என்பதை தலைமை தேர்தல் ஆணையரே ஒப்புக் கொண்டுள்ளார். இவ்வாண்டு ஆக.17ம் தேதி தலைமை தேர்தல் ஆணையர் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கூறும் ஒவ்வொரு வார்த்தையையும் சோதனைக்கு உட்படத்துவோம். கதவு எண் பூஜ்ஜியம் என்று இருந்த ஒவ்வொரு வாக்காளரையும் சோதனை செய்தோம். பங்களாவில் வசிக்கும் நரேந்திரகுமார் என்பவருக்கு வீட்டு எண் '0' என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த முகவரியை தேடிச் சென்றால் அங்கு யாரும் இல்லை.
ஹரியானாவில் ஹோடல் தொகுதியில் ஒரே வீட்டில் 501 வாக்காளர்கள் வசிப்பதாக மோசடி செய்யப்பட்டுள்ளது. மற்றொரு சிறிய வீட்டில் 108 வாக்காளர் வசிப்பதாக வாக்காளர் பட்டியலில் கூறப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் சட்டப்படி 10க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் ஒரே முகவரியில் இருந்தால் நேரடி சோதனை செய்ய வேண்டும். தேர்தல் ஆணையம் வேண்டுமென்றே வாக்காளர்களின் முகவரிகளை சரிப்பார்க்கவில்லை. ஹரியானாவில் சட்டமன்ற தேர்தலுக்கு முன் ஒரு தொகுதியில் மட்டும் 3.5 லட்சம் வாக்குகள் அழிக்கப்பட்டுள்ளன. இந்த முறைகேடுகள்தான் பாஜக முதலமைச்சர் நயாப் சிங் சைனி கூறிய உக்தி. ஆட்சி திருட்டு நாட்டின் ஜனநாயகத்தை அழித்தது. எஸ்.ஐ.ஆர். என்ற புதிய ஆயுதம் மூலம் ஜனநாயகத்தை அழிக்கிறார்கள். ஹரியானாவை தொடந்து பீகாரில் ஆட்சி திருட்டுக்கான பணியை தேர்தல் ஆணைய உதவியுடன் பாஜக தொடங்கிவிட்டது. இந்திய இளைஞர்களுக்கு ஜனநாயகத்தை காப்பாற்றும் வலிமை உள்ளது என ராகுல் தெரிவித்தார்.
