35 வயது மகன் மரணம் தொடர்பாக பஞ்சாப் மாஜி அமைச்சர், டிஜிபி மீது அரியானா போலீசார் வழக்கு பதிவு: குடும்ப பிரச்னையில் தற்கொலையா?
சண்டிகர்: பஞ்சாப் மாஜி அமைச்சர் மற்றும் டிஜிபியின் மகன் மரணம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள அரியானா போலீசார் இது தொடர்பாக உதவி கமிஷனர் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்துள்ளனர். பஞ்சாப் மாநில முன்னாள் அமைச்சர் ரஸியா சுல்தானா மற்றும் முன்னாள் டிஜிபி முகமது முஸ்தபா ஆகியோரின் மகன் அகில் அக்தர்(35). இவருக்கு திருமணமாகி அரியானா மாநிலம் பஞ்ச்சுக்லாவில் வசித்து வந்தார். கடந்த 16ம் தேதி தனது வீட்டில் அகில் அக்தர் மரணமடைந்தார். போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
பிரேத பரிசோதனைக்கு பின் உடல் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின் 17ம் தேதி ஷம்சுதீன் என்பவர் அகில் அக்தர் மரணத்தில் சில மர்மங்கள் இருப்பதாக குற்றம் சாட்டி போலீசில் புகார் அளித்தார். இதை தொடர்ந்து, அரியானா பஞ்ச்சுக்லா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அகில் அக்தர் தனது சமூக வலைதள பதிவில், தனது தந்தைக்கும் தனது மனைவிக்கும் இடையே தவறான உறவு இருந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இதில், தன்னுடைய தாயும் முன்னாள் அமைச்சருமான ரஸியா சுல்தானா, அவரது சகோதரி மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் சிருஷ்டி குப்தா,‘‘ போலீசுக்கு வந்த புகார் மற்றும் சமூக வலைதளங்களில் அகில் அக்தரின் பதிவுகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்துவதற்கு உதவி கமிஷனர் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு அக்தரின் மரணத்திற்கான காரணங்கள் குறித்தும் மருத்துவ ரீதியாகவும் ஆழமான விசாரணை நடத்துவார்கள்’’ என்றார்.