Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உழைப்பால் உயரும் குழலி குமரேசன்!

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகில் இலுப்பைக்கோரை எனும் கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து, பட்டதாரியாகி, தமிழை சுவாசித்து, எழுத்தை நேசித்து கவிஞராக உருவாகி, மாத இதழின் துணை ஆசிரியராகியவர், இன்று வெற்றிகரமான பெண் தொழில் முனைபவராக பரிணமித்து தனது நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக, கேட்டரிங் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பின் இயக்குநராக உயர்ந்திருப்பவர் திருமதி. குழலி குமரேசன். இவரதுகணவர் குமரேசன் இயற்கை விவசாயி.இரண்டு மகன்கள், ஒருவர் மென்பொருள் துறையில்பணி, இன்னொருவர் ஏரோ நாட்டிக்கல் மெயிண்டனன்ஸ் படிப்பில்.தான் வாழும் பகுதி தஞ்சை அருகே ஒரு கிராமம் என்பதாலும், தான் விவசாயக்குடும்பம் என்பதாலும் இயற்கை விவசாயம் செய்து அவற்றை நேரடி விற்பனை மற்றும் இயற்கை விவசாய இடுபொருள்கள்(உரங்கள்) தயாரித்து அவற்றை விற்பனை செய்துவருகிறார்.

தனக்கு சமையல் மேல்உள்ள ஆர்வத்தால், 16 வருடங்களாக வீட்டிலிருந்து விசேஷங்களுக்கான உணவு தயாரிப்பு (கேட்டரிங்) நிறுவனத்தை நடத்தி வருகின்றார். அதிலும் முழுவதுமாக பெண்களை மட்டுமே வைத்து செய்து வருகிறார். தனக்கு கணவரும், பிள்ளைகளும் தொழில் உற்பத்தி மற்றும் விற்பனையில் நேரடியாக உடனிருந்து ஊக்குவிப்பதால் தற்போது உணவுப் பொருள் தயாரிப்புகளான செக்கு எண்ணெய் வகைகள். சிறிய அளவிலான அரிசி ஆலை, நவ தானியங்களின் மாவுப் பொருட்கள், மசாலா பொருட்கள், மாவு தயாரித்தல் மற்றும் மாட்டுத்தீவனம் தயாரிக்கும் தொழில் நிறுவனத்தையும் கேட்டரிங் நிறுவனத்தையும் தான் வசிக்கும் கிராமத்திலேயே உருவாக்கி பலரின் கவனத்தை

ஈர்த்துள்ளார்.தான் தொழில் முனைபவரான அனுபவத்தைப்பற்றி குழலி குமரேசனிடம் கேட்டபோது, “2007 ம் ஆண்டிலிருந்து விவசாயியாக இருந்த நான் எனது உற்பத்திப் பொருட்களுக்கான நேரடி விற்பனையாளராக தொழில் துவங்கினேன். இயற்கையில் விளைந்த அரிசி, நெல், உளுந்து, எள், காய்கறி போன்ற பொருட்களை நேரடியாக விற்பனை செய்தேன். அதை மதிப்புக்கூட்டுப்பொருளாக எண்ணெய்,உளுந்து,மாவு வகைகளாக மதிப்புக்கூட்டுப் பொருளாக்கினேன். பிறகு அதையே உணவு தயாரிப்புக்காக (கேட்டரிங்) பயன்படுத்தி தொழிலில் முன்னேறினேன். என்னுடைய உணவு தயாரிப்பிற்காக கிராமப்பெண்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்கினேன். தற்போது

எந்திரங்களைக் கொண்டு உணவு தயாரிப்பு நிறுவனம் துவங்கியுள்ளேன். அதிலும் முழுவதாக பெண்களுக்கே வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கிறேன்”என்றார்.

தனது கிராமத்தில் குடிசைத்தொழிலாக நடத்தி வந்த தொழிலினை இன்று தன் முயற்சியிலும், அனுபவத்தினாலும் அயராத உழைப்பினாலும் தொழில் நிறுவனமாக உயர்த்தியுள்ளதோடு. பலருக்கு வேலை வாய்ப்பைத் தரக்கூடிய ஒரு நிறுவனமாக வளர்ச்சி கண்டுள்ளார்.குழலி குமரேசன் கூறும்போது, எனது உற்பத்தி பொருட்களை சந்தைப் படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபடும்பொழுது, விற்பனைக்கான வாய்ப்புகள் பெறக்கூடிய பயிற்சிகளை எனது வட்டார அரசு விவசாய அலுவலர்கள்‌மூலமாக பயிற்சி பெற்றேன். சக கிராமப்புற பெண்களும் அவரவரது திறமைக்கேற்ப அவர்களின் உற்பத்திப்பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான பயிற்சிகளுக்கான வழிவகை செய்து, பயிற்சி சான்றிதழ்கள் பெற்று, அதன் மூலம் தொழில் செய்வதற்கான வங்கிக்கடன்கள் பெற்று அவர்கள் வாழ்வாதாரம் உயர்வதற்கான எனது முதல் கட்ட முயற்சியாக பொதுவாழ்வில் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன். சமுதாயத்தில் பெண்கள் தன்னம்பிக்கையுடன் அவர்களுக்கான வாழ்வாதாரத்திற்குத் தேவையான வருமானத்தை அவர்களே பெற்றுக்கொள்ள ஒவ்வொருவரும் ஒரு தொழில் முனைவோராக உருவாகினால், ஒரு தன்னம்பிக்கை மிகு சமுதாயம் உருவாகும் என நம்பிக்கையோடு குறிப்பிடுகிறார்.

ஒரு சிறு விவசாயியாக இருந்து விவசாயப்பொருட்களைத் தனது விவசாயப்பொருட்களை மட்டும் சந்தைப்படுத்திக் கொண்டிருந்த குழலி குமரேசன், சிறு உணவு தயாரிப்பு நிறுவனமாக இருந்ததை இன்று பல விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட பொருட்களை உணவு அரசு தரச்சான்றுடன் கூடிய விற்பனைப்பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமாக உருவாக்கியுள்ளார். அதற்காக அரசாங்கம் தனக்கு மாவட்ட தொழில் மையம் மூலமாக உதவிகளை செய்ததை நன்றியோடு குறிப்பிடுகிறார்.தனக்கு இந்த தொழில்நிறுவனம் தொடங்க தான் கற்றுக்கொண்ட பாடங்களை, தயாரித்தப்பொருட்களை சந்தைப்படுத்தும் போது அதற்கான உப பொருட்கள் வாங்குவதற்காகவும், தரச்சான்று பெற்ற பொருட்களாக விற்பனைப் பொருளாக்குவதற்கும் நிதி வசதிக்காக ,வங்கியை அணுகிய போது,இந்த தொழில் துவங்குவதற்கான முறையான பயிற்சி சான்றிதழ் மற்றும் ஆவணங்கள் பெறுவதில் நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டு இதனாலேயே நிறைய தொழில் முனைவோர்கள் தொழில் தொடங்கி செயல்படுவதில் ஈடுபடத்தயங்குகிறார்கள் என்பதை கருத்தில் கொண்ட அவர்கள் விரக்தியால் முடங்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் தகுந்த வட்டார அரசு அலுவலர்களை அணுகி தொழில் முனைவோருக்கான பயிற்சி வகுப்புகளை நேரடியாக தானும் எனது கிராமப்புற பெண்களும் பெறும் வகையில் தனது கிராமத்திலேயே தொழில் முனைவோருக்கான குழுக்களை உருவாக்கி,பயிற்சி சான்றிதழ்களையும் பெறச்செய்து பல தொழில் முனைவோர்களை உருவாக்கிவருகிறார்.

தொழில் முனைபவராக மட்டுமின்றி புதுக்கவிதையாக எழுதவும், வாசிக்கவும் ஆரம்பித்து. சில வருடங்களாக, தன்னைப்போல் எழுதவும் வாசிக்கவும் விருப்பப்பட்ட தமிழ் ஆர்வலர்களை தன்னோடு இணைத்து அவர்களுக்கான‌ மேடைகள் உருவாக்கி ஊக்கப்படுத்தியும் வருகிறார். அதற்கென அறக்கட்டளை ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் தமிழ் ஆர்வலர்களை ஊக்கப் படுத்தி வருகிறார். தனது கவிதை களைத் தொகுத்து ஏற்கெனவே வெளியிட்டுள்ளார். தற்போது இயற்கை மருத்துவ நூல் ஒன்றினை எழுதும் முயற்சியில் உள்ளார். பத்திரிகைத் துறையில் தனது உயிர்த் தோழியான லீலா லோகநாதனுடன் இணைந்து கால் பதித்து மாத இதழை நடத்தி அதன் மூலமாக. பலரின் திறமையையும் ஆளுமையையும் ஊக்கப்படுத்தி வருகிறார்.தமிழ் ஆர்வலராக, பத்திரிகையாளராக, இயற்கை ஆர்வலராக, தொழில் முனைபவராக முன்னெடுத்தலின் பேரில் தமிழ்ச்சங்கங்களும், தன்னார்வ நிறுவனங்களும் தன்னை ஊக்குவிக்கும் பொருட்டு, உணவு தயாரிப்புக்கான இயற்கை உணவுக்கலை இளவரசி பட்டமும், சமையல் திலகம் விருதும், இலக்கிய வட்டங்கள் மூலமாக கவிச்செம்மல் விருதும், இரும்புப்பெண்மணி விருது, சிங்கப்பெண் விருது, வீரப்பெண்மணி விருது, பிரபஞ்சகவி விருது, விரல் அணங்கு விருது போன்ற விருதுகளைப்‌பெற்று, தன்னைத் தமிழ்ப்பணிக்காக மேலும் உற்சாகத்தோடு ஈடுபடுத்தி வருகிறார்.

எதிர்காலத் திட்டங்கள் குறித்து கேட்டபோது...

“முற்றிலும் பெண்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்களுக்கு என ஒரு உற்பத்தி மையம் துவக்கி அதில் முழுவதும் பெண்களையே பணியமர்த்தி தானும் அவர்களோடு பணியாற்றிடவேண்டும். அந்த பொருட்களை சர்வதேச தரத்துடன் உற்பத்தி செய்து, சர்வதேச அளவில் உற்பத்திப்பொருட்களை சந்தைப்படுத்தவும்ஆசை. இது குறித்து தொழில்துறை அமைச்சரை சந்தித்து பேசவும் ஆசை.பெண்களை மன அழுத்தத்தில் இருந்து மீட்கும் ஒரு இலவச ஆலோசனை மையம் தொடங்கிடவும், பெண்களுக்கு தேவைப்படும் சட்ட ஆலோசனைகளையும் அங்கே வழங்கிட வேண்டும் என்பதும் எதிர்காலத் திட்டம்”. என்கின்றார்.

- கீழை அ.கதிர்வேல்.