Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மகிழ்ச்சிக்கு வழி

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. வேலை நிமித்தமாக வெளியூர்களில் வசிப்பவர்களுக்கு சொந்த ஊர் சென்று தீபாவளி கொண்டாட வேண்டும் என்பது ஒரு முக்கிய இலக்கு. இதற்கு பெரும்பங்களிப்பது போக்குவரத்து. இந்த போக்குவரத்தை பொறுத்தவரையில் ரயில்கள், பஸ்களில் பயணிப்பது தான் பொதுமக்களின் முதல் தேர்வாக உள்ளது. அதிலும் குறிப்பாக நடுத்தர மக்களின் பயணம் என்பது அரசு பேருந்துகளை நம்பியே தொடர்கிறது.

தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் தொடரும் கூட்டநெரிசலும், அதனால் ஏற்படும் சிரமங்களும் பெரும்பாலும் மக்களுக்கு ஒருவித மனஅழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனை முழுமையாக உணர்ந்த தமிழக அரசு, அதனை தவிர்க்கும் வகையில் சீரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மிக முக்கியமாக பண்டிகை காலங்களில் தலைநகரான சென்னையில் இருந்தும், இதர முக்கிய நகரங்களில் இருந்தும் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இந்தவகையில் நடப்பாண்டு தீபாவளிக்கு சென்னையின் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து கடந்த 17ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தலைநகரான சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 5,900 சிறப்பு பேருந்துகள் என்று 4 நாட்களும் சேர்த்து மொத்தம் 14,268 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல் பிற முக்கிய நகரங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 6,110 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இந்த வகையில் மாநிலம் முழுவதும் மொத்தமாக 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சிறப்பு பேருந்துகளை இயக்குவதோடு மட்டுமன்றி, முன்பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளையும் துரிதகதியில் செய்துள்ளது அரசு போக்குவரத்து துறை. அரசின் இந்த முன்னேற்பாடு காரணமாக 3நாட்களில் மட்டும் 3லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடையூறுகள் எதுவும் இல்லாத இனியபயணம் மேற்கொண்டுள்ளனர். இது ஒரு புறமிருக்க, தீபாவளி கொண்டாட்டம் முடிந்த மறுநாளும் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமது சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் ஆகியோரின் நலனை கருத்தில் கொண்டு 21ம் தேதியும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் மாநிலம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், இதனை ஈடுசெய்யும் வகையில் 25ம் தேதி பணிநாளாக எடுத்துக்கொள்ளலாம் என்றும் அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரமங்களும், இடையூறுகளும் இல்லாத மகிழ்ச்சியான மனநிலையில் கொண்டாடும்போது தான், ஒரு பண்டிகை கொண்டாட்டம் என்பது முழுமையாக நிறைவு பெறும். இந்தவகையில் சொந்த ஊரில் உறவுகளுடன் கூடி மகிழ்ந்து தீபாவளி கொண்டாட சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது தமிழ்நாடு அரசு.

அந்த கொண்டாட்டம் முடிந்தவுடன் பரபரப்புடன் பணிக்கு திரும்ப வேண்டிய சூழல் உள்ளது. இதையும் தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் கூடுதலாக ஒருநாள் சிறப்பு விடுமுறையை அளித்துள்ளது நமது அரசு. மொத்தத்தில் மக்களின் சிரமம் தவிர்த்து, இடையூறுகள் இல்லாமல் மகிழ்ச்சியுடன் தீபாவளி கொண்டாட வழிவகுத்துள்ளது தமிழ்நாடு அரசு என்பதே நிதர்சனம்.