Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விடிய விடிய மகிழ்ச்சிக் கடலில் நீந்தி திளைத்திருந்தேன்: பாமக நிறுவனர் ராமதாஸ் உற்சாக அறிக்கை

சென்னை: வன்னியர் சங்கம் சார்பில் நடைபெற்ற மகளிரணி மாநாடு குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்; என் சகோதரிகளே, பெண் தெய்வங்களே, பெண் தேவதைகளே நன்றி, நன்றி, நன்றி. பூம்புகாரில் நேற்று வன்னியர் சங்கம் - பாட்டாளி மக்கள் கட்சி ஒருங்கிணைத்த "வன்னியர் மகளிர் பெருவிழா மாநாடு" மகத்தான வெற்றி பெற்றுள்ளதை நினைக்கையில், விடிய விடிய உறக்கமின்றி மகிழ்ச்சியில் மிதந்தேன். பல நாட்களாகவே, பல்வேறு காரணிகளால், நான் உறக்கம் தொலைத்திருந்தேன். நேற்று அப்படி இல்லை, விடிய விடிய மகிழ்ச்சிக் கடலில் நீந்தி திளைத்திருந்தேன்.

என் சகோதரிகளையும், பெண் தெய்வங்களையும், பெண் தேவதைகளையும், பாட்டாளி சொந்தங்களையும், வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவற்றின் பொறுப்பாளர்களையும் குடும்பத்தோடு பூம்புகாரில் பார்த்ததை விட; அவர்கள் என்னைப் பார்த்து மகிழ்ந்ததை விட; பெரிய மகிழ்ச்சி ஏதேனும் இருக்குமா தெரியவில்லை. நீங்கள் வருகின்ற சாலை வழிப்பாதையில் கவனம் வைத்து வருமாறு வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டிருந்தேன். அவ்வண்ணமே பாதுகாப்பாக வந்து, பாதுகாப்பாக வீடு திரும்பிய தகவலால்; கூடுதல் மகிழ்ச்சியில் இருக்கிறேன். பெண்களுக்கு பெருமை, பெண்மையை போற்றுதல், பெண் கல்வி வலியுறுத்தல், மது மற்றும்- போதை வஸ்துக்கள் முற்றிலும் ஒழிப்பு, அனைத்திலும் பெண்களுக்கு சமஉரிமை - வேண்டி வலியுறுத்தி நான் பேசும்போது நீங்கள் அளித்த கைத்தட்டல் வரவேற்பு ஆள்வோரின் செவிப்பறையில் மோதியிருக்கும்.

கண்ணகிக்கு பெருமை சேர்க்கும் பூம்புகார் மண்ணில், காவிரித்தாய் வங்கக்கடலில் கலக்கிற இடத்தில்; வன்னியர் சங்கம் சார்பில், என்னுடைய தலைமையில் நடந்து முடிந்திருக்கிற பிரம்மாண்டத் திருவிழா இது என்பதே பெருமையாக இருக்கிறது. வன்னியர்களுக்கான 10.5 இட ஒதுக்கீட்டை முழுமையாய் வென்றெடுக்க, அனைத்து சமூகத்தவருக்குமான உரிய இட ஒதுக்கீடு, சாதி வாரியான கணக்கெடுப்பின் முக்கியத்துவம் குறித்த நம்முடைய இலக்கும் –பார்வையும் அனைத்து சமூகத்துக்குமான பொதுப்பார்வை என்பதை அனைவருமே அறிவர். மகளிரை முழுமையாக கொண்டாடி, மகளிரை போற்றி, மகளிர்க்கான எல்லா வகையிலான நீதியும் தடையின்றி கிடைப்பதற்கு உறுதியேற்ற ஒரே விழா; இந்த விழாதான்.

கொட்டும் மழையிலும், சமூகத்துக்கான விடியலை எதிர்நோக்கி நீங்கள்; கைக்குழந்தைகளோடு அசையாமல் நின்ற ஒன்றே; வென்று விட்டோம் என்பதை பறை சாற்றுகிறது. நிலவையும், சூரியனையும், மழையையும், கதைக்களத்தையும் போற்றி; காப்பியத்தை தொடங்குகிறார் இளங்கோவடிகள். சிலப்பதிகாரத்தின் மங்கலப்பாடலாக இளங்கோவடிகள்,

"மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்,

நாமநீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல்,

மேல்நின்று தான்சுரத்தலான்" என்றெழுதுகிறார்.

சிலப்பதிகாரத்தின் இந்த வரிகளை நெஞ்சிலேந்தி, பெருமழையை போற்றி நின்ற என் சகோதரிகளையும்; பெண் தெய்வங்களையும்; பெண் தேவதைகளையும் போற்றுகிறேன்; வாழ்த்துகிறேன். நிலவு, சூரியன், மழை -இது எல்லோருக்குமே பொதுவானது. உயர்ந்தவன், தாழ்ந்தவன், பணக்காரன், ஏழை -என்றெல்லாம் பார்த்து பெய்வதில்லை மழை; காய்வதில்லை; நிலவும் - சூரியனும்... அரும்பாடுபட்டு உழைத்த பாட்டாளி சொந்தங்களுக்கு பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.