ஈஞ்சம்பாக்கத்தில் மனைவி, 2 மகன்களை கொன்றுவிட்டு தொழிலதிபர் தற்கொலை; பிரேத பரிசோதனை முடிந்து 4 பேரின் சடலங்கள் உறவினரிடம் ஒப்படைப்பு
* 2 ஆம்புலன்ஸ்களில் சேலம் எடுத்துசெல்லப்பட்டது
துரைப்பாக்கம்: ஈஞ்சம்பாக்கத்தில் மனைவி, 2 மகன்களை கொன்றுவிட்டு தொழிலதிபர் தற்கொலை செய்த சம்பவத்தில், பிரேத பரிசோதனை முடிந்து 4 பேரின் சடலங்கள் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 2 ஆம்புலன்ஸ்களில் சடலங்கள் சேலம் எடுத்துசெல்லப்பட்டு இறுதி சடங்கு செய்யப்படும் என தெரிகிறது. ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் சிரஞ்சீவி தாமோதர குப்தா (56). தொழிலதிபரான இவர், சென்னை அண்ணாசாலையில் உள்ள ரிச் தெருவில் எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் சிசிடிவி கேமரா மொத்த விற்பனை கடை நடத்தி வந்தார். இவரது மனைவி ரேவதி (46). இவர்களது மகன்கள் ரித்விக் அர்ஷத் (15), தித்விக் அர்ஷத் (11). சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் மூத்த மகன் அர்ஷத் 10ம் வகுப்பும், 2வது மகன் தித்விக் அர்ஷத் 7ம் வகுப்பும் படித்து வந்தனர். மகன்கள் பள்ளி படிப்புக்காக சிரஞ்சீவி, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஈஞ்சம்பாக்கம் சாகாஷ் வைபவ் என்கிளைவ் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வந்துள்ளார்.
கொரோனா இழப்புக்கு பிறகு தனது கடையை விரிவுபடுத்த பல கோடிக்கு சிரஞ்சீவி கடன் வாங்கியுள்ளார். கடன் கொடுத்தவர்கள் சிரஞ்சீவியிடம் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்கியவர்களும் அதற்கான பணத்தை கொடுக்கவில்லையாம். இதனால் மனஅழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். கடன் கொடுத்தவர்கள் அவரது மனைவி ரேவதிக்கும் நேரடியாக தொலைபேசியில் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கடன் தொல்லை காரணமாக தீபாவளி கொண்டாடவில்லையாம். மகன்களுக்கும் புதிய துணிகள் மற்றும் பட்டாசுகள்கூட வாங்கிகொடுக்கவில்லையாம். இந்நிலையில் நேற்று அதிகாலை தொழிலதிபர் சிரஞ்சீவி, சேலத்தில் வசித்து வரும் தனது மாமா முரளியின் வங்கி கணக்குக்கு கூகுள்பே மூலம் ரூ.1 லட்சம் அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து விசாரிக்க முரளி போன் செய்தபோது வெகுநேரமாக போனை எடுக்காததால் சந்தேகமடைந்த முரளி, சென்னை சாலிகிராமத்தில் வசித்து வரும் சிரஞ்சீவியின் மனைவி ரேவதியின் தம்பி சாய்கிருஷ்ணாவுக்கு போன் செய்து தகவல் கூறி, நேரில் சென்று பார்க்கும்படி கூறியுள்ளார். அதன்படி அவர் சென்று பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்துள்ளது. படுக்கையறையில் தனது சகோதரி ரேவதி மற்றும் 2 மகன்கள் முகத்தில் பிளாஸ்டிக் கவரால் மூடிய நிலையில் இறந்து கிடந்துள்ளனர். மாமாவான தொழிலதிபரை தேடியபோது படுக்கையறையில் உள்ள பாத்ரூமில் கால்கள் கட்டிய நிலையில் கத்தியால் கை மணிகட்டு மற்றும் கழுத்து அறுத்து பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து நீலாங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், 4 பேரின் சடலத்தை மீட்டு பிரேத பிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அப்போது, சிரஞ்சீவி தமிழில் எழுதிவைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், எங்களது சாவுக்கு யாரும் காரணமில்லை எனவும் எழுதிவைக்கப்பட்டுள்ளது. சாய்கிருஷ்ணா அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதில், சீரஞ்சீவி கை மணிக்கட்டை அறுத்து தற்கொலை செய்வதற்கு முன்பு தூங்கிக்கொண்டிருந்த மனைவி, இரு மகன்களின் முகத்தில் பிளாஸ்டிக் கவரால் மூடி மூச்சை திணறடித்து கொலை செய்துள்ளார். மேலும் சிரஞ்சீவி பூர்வீகம் ஆந்திர மாநிலம் என்றாலும் அவரது தந்தை ஜானகிராமன் குப்தா குடும்பத்துடன் சேலத்தில் குடியேறியுள்ளார். சிரஞ்சீவி மட்டும் திருமணத்துக்கு பிறகு சென்னையில் எலக்ட்ரானிக் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். 4 பேரின் இறப்பு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து 4 பேரின் சடலங்களும் சேலத்தை சேர்ந்த உறவினர் முரளியிடம் போலீசார் ஒப்படைத்தனர். இன்று காலை 4 பேரின் சடலங்களும் 2 ஆம்புலன்ஸ்களில் சேலம் எடுத்து செல்லப்பட்டது. அங்கு உறவினர்கள் முன்னிலையில் இறுதிசடங்கு செய்யப்படும் என கூறப்படுகிறது.