Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

டிரம்பின் அமைதி திட்டத்தில் திடீர் திருப்பம் காசா ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஹமாஸ் மறுப்பு: அமைதிப் பேச்சுவார்த்தையில் மீண்டும் முட்டுக்கட்டை

கெய்ரோ: அமெரிக்காவின் அமைதித் திட்டத்தில் உள்ள சில முக்கிய நிபந்தனைகளை ஏற்க மறுத்துள்ள ஹமாஸ் அமைப்பு, எகிப்தில் நடைபெற உள்ள அதிகாரப்பூர்வ கையெழுத்து நிகழ்ச்சியைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்திருப்பதால், காசாவில் நிரந்தர அமைதியை ஏற்படுத்துவதில் மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது. கடந்த 2023, அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் உட்பட 1,219 பேர் கொல்லப்பட்டனர்.

இதற்குப் பதிலடியாக கடந்த 2 ஆண்டாக இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் காசாவில் இதுவரை 67,682 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இரு தரப்புக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை அமலுக்கு வந்தது. இதன் ஒரு பகுதியாக, காசாவின் சில பகுதிகளில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறியதை அடுத்து, இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பி வருகின்றனர். இந்த ஒப்பந்தத்தின்படி, திங்கட்கிழமை நண்பகலுக்குள் (நாளை) ஹமாஸ் அமைப்பு, தன்னிடம் மீதமுள்ள 47 இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும். அதற்கு பதிலாக, இஸ்ரேல் தனது சிறைகளில் உள்ள 250 பாலஸ்தீனிய கைதிகளையும், போரின்போது கைது செய்யப்பட்ட 1,700 காசா கைதிகளையும் விடுவிக்கும்.

இந்த சூழலில், அமைதி ஒப்பந்தத்தின் அடுத்தகட்டமாக எகிப்தில் நடைபெற உள்ள அதிகாரப்பூர்வ கையெழுத்து நிகழ்ச்சியைப் புறக்கணிக்கப் போவதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த அமைதித் திட்டத்தில், ஹமாஸ் அமைப்பினர் காசாவை விட்டு வெளியேற வேண்டும் மற்றும் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் போன்ற நிபந்தனைகள் இருப்பதே இதற்குக் காரணம்.

இதுகுறித்து ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு உறுப்பினர் ஹொசாம் பத்ரான் கூறுகையில், ‘ஹமாஸ் உறுப்பினர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், பாலஸ்தீனியர்களை அவர்களின் சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றுவது பற்றிய பேச்சு அபத்தமானது மற்றும் முட்டாள்தனமானது. மேலும், ஹமாஸ் அமைப்பு காசாவின் புதிய அரசாங்கத்தில் இருந்து விலகினாலும், ஆயுதங்களைக் கைவிடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஹமாஸ் ஆயுதங்களைக் கைவிடத் தவறினால், தாக்குதல்கள் மீண்டும் தொடங்கப்படலாம் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளதால், காசா அமைதிப் பேச்சுவார்த்தையின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.