*ராமேஸ்வரத்திற்கு கூடுதல் ரயில்கள் இயக்க திட்டம்
மண்டபம் : ராமேஸ்வரம் பகுதிக்கு வெளி மாநிலங்களில் இருந்து கூடுதல் ரயில்களை இயக்கும் விதமாக ராமநாதபுரம் முதல் ராமேஸ்வரம் வரை மின்கம்பங்கள் அமைக்கும் பணிகளை ரயில்வே நிர்வாகம் தீவிரப்படுத்தி வருகிறது.
பாம்பன் கடலில் புதிதாக அமைக்கப்பட்ட ரயில் பாலம் மற்றும் தூக்குப் பாலம் திறக்கப்பட்டு ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனையடுத்து சென்னை, கன்னியாகுமரி, காசி, ஆந்திரா உள்பட வெளிமாநிலங்களில் இருந்து மதுரை மற்றும் திருச்சி வழியாக ராமேஸ்வரத்திற்கு தினசரி மற்றும் வாராந்திரம் என 17 ரயில்கள் இயங்கி வருகிறது.
ராமேஸ்வரத்திற்கு வரும் அனைத்து ரயில்களும் திருச்சி மற்றும் மதுரை ரயில் நிலையங்களில் வந்து சேர்ந்தவுடன் அங்கிருந்து மின்சார இன்ஜின்கள் மாற்றப்பட்டு எரிபொருள் ரயில் இன்ஜின்கள் மூலம் ராமேஸ்வரம் பகுதிக்கு ரயில்கள் வந்து செல்கின்றன. இதனால் மதுரை, திருச்சி ரயில் நிலையங்களில் 20 நிமிடங்களுக்கு மேலாக ரயில்கள் காத்திருந்து பின்பு புறப்பட்டு ராமேஸ்வரத்திற்கு வருகை தரும்.
மேலும் ராமேஸ்வரம் வரை மின்சார இன்ஜின் ரயில்கள் செல்வதற்கு மின் கம்பங்கள் வசதிகள் இல்லாததால், வெளி மாநிலங்களில் இருந்து ராமேஸ்வரத்திற்கு கூடுதலான ரயில்களை இயக்கவும் தாமதமாகி வருகிறது.
இந்நிலையில் பயணிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் விதமாக மானாமதுரையில் இருந்து ராமேஸ்வரம் வரை மின்சார இன்ஜின் பொருத்தப்பட்ட ரயில்கள் இயக்குவதற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வந்தது.
அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம், உச்சிப்புளி, மண்டபம், பாம்பன் பாலம், ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மின்கம்பம் அமைக்கும் பணிகள் துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பணிகளை முடிக்கப்பட்டு ஒரு சில மாதங்களுக்குள் மின்சார இன்ஜின் பொருத்திய ரயில்களை ராமேஸ்வரம் வரை இயக்குவதற்கு ரயில்வே நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் மண்டபம், உச்சிப்புளி ஆகிய பகுதிகளில் மின் கம்பங்கள் அமைத்து அதில் மின் கம்பிகள் பொருத்தி அதில் மின்சாரம் சீராக செல்வதற்கான மின் உபகரணங்கள் பொருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.