மும்பை: 2026-ம் ஆண்டு ஹஜ் பயணம் செல்வோர் இன்று குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர் என ஹஜ் அசோசியேஷன் தலைவர் அபுபக்கர் தெரிவித்துள்ளார். ஹஜ் பயணம் என்பது முஸ்லிம்கள் ஆண்டு தோறும் சவூதி அரேபியா நாட்டில் உள்ள மக்கா நகருக்கு மேற்கொள்ளும் புனிதப் பயணமாகும். இது முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒரு முஸ்லிம் தன் வாழ்க்கையில் ஒருமுறையாவது இப்பயணத்தை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இது இறைவனை வணங்குவதற்கான ஓர் தனி முறையாகும். அந்த வகையில், இந்திய ஹஜ் குழு மூலம் ஹஜ் பயணத்தை மேற்கொள்ளலாம் என்னும் விதிமுறையை இந்திய ஹஜ் குழு செயல்படுத்தி வருகிறது. 2026-ம் ஆண்டு ஹஜ் பயணம் செல்வோர் விண்ணப்பிக்க ஜூலை 30-ந்தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது கூடுதலாக ஒரு வார காலஅவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வருகிற 7-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஒன்றிய அரசு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் செல்வோரை தேர்வுசெய்ய மும்பையில் இன்று குலுக்கல் நடைபெறுகிறது. ஹஜ் கமிட்டி வழியாக 2026ஆம் ஆண்டு ஹஜ் பயணம் செய்வதற்கு தமிழ்நாட்டிலிருந்து 10890 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். கடந்த ஆண்டு தனியார் ஹஜ் நிறுவனங்கள் வழி செல்வதில் சிக்கல்கள் ஏற்பட்டதால் அதிகமானோர் இந்த ஆண்டு ஹஜ் கமிட்டி வழியாக விண்ணப்பம் செய்துள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் விண்ணப்பங்கள் 2 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில் இந்தாண்டு 3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.