சென்னை: தலைமுடி ஏற்றுமதியில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக தமிழ்நாடு, அசாம், நாகலாந்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. உலக அளவில் விக், ஹேர் எக்ஸ்டென்சன் உள்ளிட்டவற்றுக்கு தேவை அதிகரித்துள்ளது. திருப்பதி, பழனி, திருத்தணி, வேளாங்கண்ணியில் தலைமுடியை பக்தர்கள் காணிக்கையாக வழங்குகின்றனர். தேவை அதிகரிப்பால் விக், எக்ஸ்டென்சன் தயாரிக்க வெளிநாட்டு நிறுவனங்கள் பயன்படுத்தும் தலைமுடியில் 85% இந்தியாவில் இருந்துதான் உற்பத்தி செய்யப்படுகிறது.
காணிக்கையாக கொடுக்கும் தலைமுடியில் புரளும் கோடிக்கணக்கான ரூபாய் சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. சட்டவிரோதமாக தலைமுடி ஏற்றுமதி தொழில் நடப்பதன் மூலம் கோடிக்கணக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றமும் நடப்பதாக அமலாக்கத்துறைக்கு தகவல் கிடைத்தது. முடி ஏற்றுமதியில் ரூ.11,000 கோடிக்கு மேல் மோசடி நடந்ததாக 2022ல் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.
தலைமுடியை மொத்தமாக வாங்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிலை செய்து வருகிறார் வெங்கடேசன். கோயில் காணிக்கையாக கொடுக்கும் தலைமுடியை மொத்தமாக வாங்கி, சட்டவிரோதமாக கடத்துவதாக வழக்கு தொடரப்பட்டது. அமலாக்கத்துறை வழக்கு பதிந்து சென்னையில் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. தலைமுடியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிலதிபர் வெங்கடேசன் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. இந்த நிலையில், சென்னையில் 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
 
 
 
   