இனிமே எச்1பி விசா, கிரீன் கார்டுலாம் வேணாம்.. அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற கோல்டு கார்டு அறிமுகம்: கட்டணம் வெறும் ரூ.9 கோடிதான்
நியூயார்க்: அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேறுவதற்கான ரூ.9 கோடிக்கு கோல்டு கார்டு(தங்க அட்டை) திட்டத்தை அதிபர் டிரம்ப் அறிமுகப்படுத்தினார். கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக 2ம் முறையாக பதவி ஏற்ற டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்ற முழக்கத்தை முன்வைத்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்ஒரு பகுதியாக எச்-1பி விசா மூலம் பல்வேறு நிதி மோசடி உள்பட சட்டவிரோத செயல்கள் நடப்பதாகவும் தெரிவித்தார். இதற்கு முடிவு கட்ட எச்-1 பி விசா கட்டணத்தை ஆண்டுக்கு ரூ.88 லட்சமாக உயர்த்தி அதிர்ச்சி கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவு பிறப்பித்தார். டிரம்பின் இந்த அறிவிப்பு, இந்திய ஐடி ஊழியர்கள் அமெரிக்கா செல்லும் கனவை தவிடு,பொடியாக்கியது.
அமெரிக்காவில் வௌிநாட்டினர் குடியேற அதிபர் டிரம்ப் பிறப்பித்த உத்தரவுகளால் அமெரிக்காவில் வசித்து வந்த இந்தியா, சீனா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். இதனால் பல அமெரிக்க நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகள் வகிப்பர்களும் வௌியேற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகினர். இந்த பிரச்னைக்கு தீர்வு காண பல்வேறு நிறுவனங்கள் டிரம்பிடம் முறையிட்டன. இதனிடையே, அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற கோல்டு கார்டு(தங்க அட்டை) திட்டம் கொண்டு வரப்படும் என கடந்த பிப்ரவரியில் அறிவித்த டிரம்ப், அதற்கான நிர்வாக உத்தரவிலும் கடந்த செப்டம்பர் 20ம் தேதி கையெழுத்திட்டார்.
இந்நிலையில் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கான தங்க அட்டை திட்டத்தை அதிபர் டிரம்ப் நேற்று அறிமுகம் செய்து வைத்தார். ஏற்கனவே, அமெரிக்கா சென்று பணியாற்ற எச்-1பி விசாவும், நிரந்தரமாக வசிக்க கிரீன் கார்டும் பெற வேண்டியிருந்த நிலையில், தற்போது அதற்கு மாற்றாக தங்க அட்டை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த கோல்டு கார்டை பெற தனி நபர்கள் 1 மில்லியன் அமெரிக்க டாலர்(தற்போதைய இந்திய மதிப்பில் ரூ.9 கோடி) தொகையை அமெரிக்க அரசுக்கு நன்கொடையாக தர வேண்டும்.
இதேபோல் வௌிநாட்டினரை பணியமர்த்த விரும்பும் நிறுவனங்கள் அமெரிக்க அரசுக்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர்(தற்போதைய இந்திய மதிப்பில் ரூ.18 கோடி) தொகையை நன்கொடையாக தர வேண்டும். இவ்வாறு பணம் செலுத்துவதன் மூலம் அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கும் தகுதியை பெற முடியும். இது குறித்து அதிபர் டிரம்ப் கூறுகையில், “இந்த கோல்டு கார்டும் கிரீன் கார்டை போன்றதுதான் என்றாலும், இதில் பெரிய நன்மைகள் உள்ளன. இந்த அட்டை மூலம் பெறப்படும் அனைத்து நிதிகளும் அமெரிக்க அரசுக்கே செல்லும், இதனால் அமெரிக்காவுக்கு மிகப்பெரிய வருவாய் நன்மை கிடைக்கும். அத்துடன், மிகப்பெரிய கல்வி நிறுவனங்களில் படித்து பட்டம் பெறும் திறமையான வௌிநாட்டு மாணவர்கைள, தங்கள் நிறுவனங்களில் பணி அமர்த்தி, தக்க வைத்து கொள்ள முடியும்” என்றார்.


