Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஹெச்1பி விசாவை கடுமையாக்க டிரம்ப் திட்டம்: அமெரிக்க இந்தியர்களுக்கு வரும் புதிய சிக்கல்

நியூயார்க்: அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப், 2வது முறையாக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். குறிப்பாக ஹெச்1பி விசா நடைமுறையில் கடுமையான கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த இருப்பதாக உள்நாட்டு பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது. புதிய திட்டத்தின்படி, அமெரிக்காவில் உயர் கல்விக்காக வரும் வெளிநாட்டு மாணவர்கள் காலவரையின்றி தங்கும் நிலைமைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால், மாணவர்களுக்கு அதிகபட்சம் 4 ஆண்டுகள் மட்டுமே தங்கும் அனுமதி வழங்கப்படும். மேலும், ஊடகவியலாளர்கள், நிபுணர்களுக்கு வழங்கப்பட்டிருந்த 5 ஆண்டு விசா மற்றும் அதனை எண்ணற்ற முறை நீட்டிக்கும் சலுகைகளிலும் மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. இனி, முதல்கட்டமாக 240 நாட்கள் மட்டுமே தங்க அனுமதி வழங்கப்படும்.

பின்னர் 240 நாட்கள் வரை நீட்டிக்கலாம். ஆனால், அந்த நீட்டிப்பு அந்த பணிக்கு வரும் ஊழியர்களின் பணிக்காலத்தை விட அதிகமாக இருக்க கூடாது. அத்துடன், நிரந்தர குடியுரிமை அட்டை (கிரீன் கார்டு) வழங்கும் நடைமுறையிலும் மாற்றங்களை கொண்டு வர டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதனால், அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கி வேலை செய்ய விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு சிக்கல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இந்தியாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஐ.டி. நிபுணர்கள் மற்றும் தொழில்நுட்ப துறையில் பணிபுரிபவர்கள் ஹெச்1பி விசா மூலம் அமெரிக்காவில் வேலை செய்து வருகின்றனர். இந்த புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டால் இந்தியர்களுக்கு பெரும் சவால் ஏற்படலாம் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும், அமெரிக்காவில் பணக்காரர்கள் நிரந்தரமாக வசிப்பதற்கு தங்க அட்டை எனும் “கோல்டு கார்டு” திட்டத்தை அறிமுகம் செய்ய அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார். இந்த “கோல்டு கார்டு” விலை 5 மில்லியன் டாலராக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் ரூ.43 கோடி மொத்தத்தில், அமெரிக்க வேலைவாய்ப்பு சந்தையை பாதுகாக்கும் நோக்கில், வெளிநாட்டு தொழிலாளிகளுக்கு வாய்ப்புகளை குறைக்கும் இந்த நடவடிக்கை இந்திய இளைஞர்களின் கனவுகளுக்கு பெரிய தடையாக அமைய கூடும். இதுவும் இந்தியாவுக்கு எதிரான டிரம்பின் ஒருவித எதிர்ப்பு நடவடிக்கைதான் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.