சென்னை: திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (50). இவர் தனது மனைவி அன்னபூரணியுடன் இணைந்து அண்ணாநகர் உள்பட சென்னை முழுவதும் 20க்கும் மேற்பட்ட உடற்பயிற்சி மையங்கள் நடத்தி வருகிறார். இதில், ஆழ்வார்பேட்டையில் உள்ள உடற்பயிற்சி கூடத்தின் மேலாளராக திருவல்லிக்கேணியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பணியாற்றி வந்தார். இவரிடம், உரிமையாளர் சீனிவாசன் ஆசைவார்த்தை கூறி அவரது பெயரில் தனியாக உடற்பயிற்சி கூடம் அமைத்து தருவதாக, அவரது ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை பெற்று பாரிமுனையில் உள்ள தேசிய வங்கி ஒன்றில், பெண் மேலாளர் பெயரில் ரூ.1.75 கோடி கடன் பெற்றுள்ளார். ஆனால், சொன்னபடி பெண் மேலாளருக்கு எந்த உடற்பயிற்சி மையமும் அமைத்து தரவில்லை. மேலும், வங்கியில் வாங்கிய கடனுக்கான மாத தவணையும் கட்டவில்லை. இதுகுறித்து பெண் மேலாளர், உடற்பயிற்சி மைய உரிமையாளர் சீனிவாசன் மற்றும் அவரது மனைவி அன்னபூரணியிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் கண்டுகொள்ளவில்லை. இதனால் இளம்பெண் கடந்த மாதம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், புகார் அளித்தார்.
தகவலறிந்த சீனிவாசன் மற்றும் அவரது மனைவி அன்னபூரணி ஆகியோர் இளம்பெண் வீட்டிற்கு சென்று அவரது தாய் மற்றும் இளம்பெண்ணை கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து இளம்பெண் ஐஸ்அவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சீனிவாசன், அவரது மனைவி உள்பட 4 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, சீனிவாசனை நேற்று முன்தினம் கைது செய்தனர். விசாரணையில், சென்னையில் பல இடங்களில் உடற்பயிற்சி கூடம் ஆரம்பித்து வாடிக்கையாளர்களிடம் ரூ.10 முதல் ரூ.15 ஆயிரம் வரை வசூலித்து 2 மாதம் பயிற்சி அளித்துவிட்டு, உடற்பயிற்சி கூடத்தை நவீனமாக்க போவதாக கூறி மூடிவிட்டு, மோசடி செய்தது தெரியவந்தது. சீனிவாசன் மீது மத்திய குற்றப்பிரிவில் மோசடி வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள அன்னபூரணி உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.