Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

கவுகாத்தியில் நாளை 2வது டெஸ்ட் தொடக்கம்: தென்ஆப்ரிக்காவுக்கு இந்தியா பதிலடி தருமா?

கவுகாத்தி: இந்தியா-தென்ஆப்ரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையே 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் கொல்கத்தாவில் நடந்த முதல் போட்டியில் 30 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்ரிக்கா வெற்றிபெற்று 1-0 என முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் 2வது டெஸ்ட் நாளை கவுகாத்தியில் தொடங்குகிறது. முதல் டெஸ்ட்டில் சுழலுக்கு சாதகமான பிட்சில் 124 ரன்னை கூட சேசிங் செய்ய முடியாமல் இந்தியா தோற்றது கடும் விமர்சனத்திற்குள்ளாகி உள்ளது.

இந்த டெஸ்ட்டில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. கழுத்து வலி காரணமாக இந்த டெஸ்ட்டில் கேப்டன் சுப்மன் கில் ஆடுவது சந்தேகம் தான். அவர் ஆடாவிடில் ரிஷப் பன்ட் அணியை வழிநடத்துவார். கில்லுக்கு பதிலாக சாய் சுதர்சன் களம் இறங்கலாம். மேலும் அக்சர் பட்டேலுக்கு பதிலாக நிதிஷ்குமார் இடம் பெறுகிறார்.

மற்றபடி அணியில் எந்த மாற்றமும் இருக்காது. ஜெய்ஸ்வால் முதல் டெஸ்ட்டில் ஜான்சன் பந்தில் 2 இன்னிங்சிலும் அவுட் ஆனார். இதனால் இடதுகை வேகப்பந்துவீச்சை எதிர்கொள்ள அவர் நீண்ட நேரம் பயிற்சி மேற்கொண்டார்.

மறுபுறம் தென்ஆப்ரிக்கா முதல் டெஸ்ட்டில் வென்ற உத்வேகத்தில் உள்ளது. 15 ஆண்டுக்கு பின் இந்தியாவில் டெஸ்ட்டில் வென்ற தென்ஆப்ரிக்கா 2வது டெஸ்ட்டிலும் வெற்றிபெற்று 25 ஆண்டுகளுக்கு பின் இந்திய மண்ணில் வரலாற்றில் 2வது முறையாக தொடரை வெல்லும் முனைப்பில் களம் இறங்குகிறது. பேட்டிங்கில் கேப்டன் பவுமா இந்திய சுழற்பந்துவீச்சை லாவகமாக எதிர்கொண்டு ஆடினார். முதல் டெஸ்ட்டில் அரைசதம் அடித்த ஒரே வீரர் அவர் மட்டுமே. மார்க்ரம், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், வியான் முல்டர், ரியான் ரிக்கல்டன், கைல் வெர்ரெய்ன் பேட்டிங்கில் வலு சேர்க்கின்றனர். காயம் காரணமாக இந்த டெஸ்ட்டிலும் ரபாடா ஆடவில்லை. இதனால் அணியில் எந்தவித மாற்றமும் இருக்காது.

இதுவரை நேருக்கு நேர்...

இரு அணிகளும் இதற்கு முன் 45 டெஸ்ட்டில் மோதி உள்ளன. இதில் 16ல் இந்தியா, 19ல் தென்ஆப்ரிக்கா வென்றுள்ளன. 10 டெஸ்ட் டிராவில் முடிந்துள்ளது. கடைசியாக மோதிய 5 போட்டியில் 4ல் தென்ஆப்ரிக்கா வென்றுள்ளது.

கவுகாத்தி மைதானம் எப்படி?

கொல்கத்தா பிட்ச் சுழலுக்கு சாதமாக அமைக்கப்பட்டதால் இரண்டரை நாளில் ஆட்டம் முடிந்தது. இதனால் விமர்சனங்கள் எழுந்த நிலையில் கவுகாத்தி மைதானம் சமநிலையில் அமைக்கப்பட்டுள்ளது. முதல் 2 நாட்கள் பேட்டிங்கிற்கு சாதகமாகவும், வேகப்பந்துவீச்சுக்கு பவுன்ஸ் ஆகும் வகையிலும் இருக்கும். கடைசி 2 நாட்களில் சுழலுக்கு கைகொடுக்கும். 2012ம் ஆண்டில் கட்டப்பட்ட பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் முதன்முறையாக டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது.