Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பகுதியில் தாழ்வான சாலையில் தேங்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதி

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் உள்ள ஜெய்ஹிந்த் நகரில் தாழ்வான சாலை அமைந்திருப்பதால், அங்கு அதிகளவில் மழைநீர் வெள்ளம் தேங்கி நிற்கிறது. இதனால் அவ்வழியே சென்று வரும் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். அங்குள்ள கால்வாயை சீரமைக்கவும், சாலையை உயர்த்தி தரமாக அமைப்பதற்கு மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு 1வது வார்டான ஜெய்ஹிந்த் நகர் முதல் மேட்டு காலனி வரையில் வசிக்கும் மக்கள், பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரிகளையும் முறையாக செலுத்தி வருகின்றனர். இதன்மூலம் பேரூராட்சி பகுதிகளில் மக்களுக்கு தேவையான குடிநீர், சாலை வசதி, மின்விளக்கு, கொசுமருந்து அடித்தல், குப்பை அள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ஜெய்ஹிந்த் நகர் 2வது தெருவில் நீண்ட காலமாக தாழ்வான நிலையில் சாலை உள்ளது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலத்தின்போது, இங்குள்ள சாலையில் மழைநீர் வெள்ளமாக தேங்கி நிற்பதால் பலத்த சேதமடைந்து உள்ளன. இதன்மூலம் கொசு உற்பத்தி அதிகரித்து, அப்பகுதி மக்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்தொற்றுகள் பரவி வந்தன. மேலும், இச்சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் நடந்து செல்லும்போது, அவ்வழியே செல்லும் வாகனங்களில் இருந்து தெறிக்கும் சேறுகளால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இச்சாலையை உயர்த்தி தரமாக அமைத்து தரவேண்டும் என்று பேரூராட்சி இணை இயக்குனர் மற்றும் பேரூராட்சி அலுவலகத்துக்கு பலமுறை இப்பகுதி மக்கள் புகார் மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது பருவமழை காரணமாக கும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கம், கவரப்பேட்டை, மாதர்பாக்கம் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதில் ஜெய்ஹிந்த் நகர் 2வது தெருவில் வழக்கம் போல் மழைநீர் வெள்ளமாக தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.எனவே, ஜெய்ஹிந்த் நகர் 2வது நகரில் உள்ள மழைநீர் கால்வாயை முறையாக சீரமைத்து, இங்குள்ள சாலையை உயர்த்தி தரமாக அமைத்து தருவதற்கு மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.