அகமதாபாத் : குஜராத்தில் வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டதாகக் கூறி, போலி விண்ணப்பங்கள் மூலம், அரசுக் கருவூலத்திலிருந்து ரூ.2 கோடி மெகா ஊழல் நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குஜராத்தின் பரூச் மாவட்டத்தில், ஆனந்த் கடி கிராமோதியோக், நவ்சேத்னா விகாஸ், கம்தார் கல்யாண் மண்டல், மகாத்மா காந்தி கிராமநிர்மாண் மற்றும் வசுந்தரா சர்வஜனிக் ஆகிய அறக்கட்டளைகள் மூலம் 1,906 வீடுகளில் கழிப்பறைகளை கட்டியுள்ளதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆனால், இங்கு கழிப்பறைகள் கட்டப்படவில்லை என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மூலம் அம்பலம் ஆகி உள்ளதாக ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர் பிரவீன் மோடி, புகார் அளித்துள்ளார். அங்கலேஷ்வர் நகராட்சியில் திருமணச் சான்றிதழ்களைப் பெறுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் கழிப்பறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பிக்கப் பயன்படுத்தப்பட்டதாகத் கூறப்படுகிறது. மேற்கண்ட ஐந்து நிறுவனங்களும் சில அரசு அதிகாரிகளும் இந்த ஊழலில் ஈடுபட்டிருக்கலாம் என்று பிரவீன் மோடி தெரிவித்துள்ளார்.