Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

குஜராத் கட்ச் பகுதி அருகே திடீர் ஆக்கிரமிப்பு பாக்.கிற்கு வலுவான பதிலடி தரப்படும்: இந்தியா கடும் எச்சரிக்கை

பூஜ்: பாகிஸ்தான் மேற்கொள்ளும் எந்தவொரு தவறுக்கும் வலுவான தீர்க்கமான பதிலடி தரப்படும் என ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் பதிலடியால் இந்தியா-பாகிஸ்தான் இடையே 4 நாள் போர் நடந்தது. தற்போது இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதியாக இருக்கும் சர் கிரீக் செக்டாரில் பாகிஸ்தான் தனது ராணுவ உள்கட்டமைப்புகளை விரிவுபடுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சர் க்ரீக் என்பது குஜராத்தின் ரான் ஆப் கட்ச் மற்றும் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திற்கு இடையேயான 96 கி.மீ நீளமுள்ள அலை முகத்துவாரமாகும். இந்த சர்ச்சைக்குரிய பகுதியில் தான் பாகிஸ்தான் தற்போது ராணுவ கட்டமைப்புகளை பலப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், குஜராத்தில் உள்ள பூஜ் நகரில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள ராணுவ தளத்தில் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று ராணுவ வீரர்களுடன் தசரா விழாவை கொண்டாடினார்.

அப்போது சர் கிரீக் பகுதியில் அமைக்கப்பட்ட கூட்டு கட்டுப்பாட்டு மையத்தை வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்து ராஜ்நாத் சிங் பேசியதாவது: சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகளுக்குப் பிறகும், சர் கிரீக் செக்டாரில் பாகிஸ்தான் தொடர்ந்து சர்ச்சைகளை உருவாக்கி வருகிறது. இப்பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க பலமுறை இந்தியா முயற்சி செய்தும் பாகிஸ்தான் ஒப்புக் கொள்ளவில்லை. இந்த சூழலில், சர் கிரீக் செக்டாரில் பாகிஸ்தானின் சமீபத்திய ராணுவ உள்கட்டமைப்பு விரிவாக்கம் அதன் தீய நோக்கத்தை பிரதிபலிக்கிறது.

சர் கிரீக் பகுதியில் பாகிஸ்தானின் எந்தவொரு சாகசமும் தீர்க்கமான பதிலடியை ஏற்படுத்தும். அங்கு பாகிஸ்தான் கட்டமைப்புகளை விரிவுபடுத்தினால், அதற்கான பதில் வரலாறு மற்றும் புவியியல் இரண்டையும் மாற்றும் அளவுக்கு வலுவாக இருக்கும். 1965ம் ஆண்டில், இந்திய ராணுவம் லாகூரை அடைந்து தனது துணிச்சலைக் காட்டியது. அதே போல, தற்போது 2025ல் இந்தியாவில் இருந்து சர் கிரீக் பகுதி வழியாக கராச்சிக்கு செல்ல முடியும் என்பதை பாகிஸ்தான் நினைவில் கொள்ள வேண்டும்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போதே, லே முதல் சர் கிரீக் பகுதி வரையிலும் இந்தியாவின் பாதுகாப்புகளை பாகிஸ்தான் ஊடுருவ முயன்றது. ஆனால் இந்தியப் படைகளின் விரைவான மற்றும் பயனுள்ள எதிர் நடவடிக்கை பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பின் பலவீனங்களை அம்பலப்படுத்தியது. மேலும், இந்தியா தான் தேர்ந்தெடுக்கும் நேரத்தில், இடத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்த முடியும் என்ற தெளிவான செய்தியையும் உலகிற்கு அனுப்பியது. ஆபரேஷன் சிந்தூரின் அனைத்து ராணுவ நோக்கங்களையும் இந்தியப் படைகள் வெற்றிகரமாக அடைந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.