சென்னை: சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள லயன் சபாரியில் 6 சிங்கங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்திற்கும் தனித்தனி கூண்டுகள் உள்ளன. இதில் இரும்பு வளையம் அமைக்கப்பட்ட வேன்களில் பார்வையாளர் வந்து கண்டுகளிப்பதற்காக தினந்தோறும் தலா இரண்டு சிங்கங்கள் சிங்கம் உலாவிடத்தில் திறந்து விடப்படுவது வழக்கம். இந்நிலையில், கடந்த 1ம்தேதி புதன்கிழமை காலை 9 மணி அளவில் வழக்கம்போல் குஜராத் சிங்கம் உள்பட 2 சிங்கங்கள் கூண்டிலிருந்து சிங்கம் உலாவிடத்திற்கு திறந்து விடப்பட்டன. இதில் ஒரு சிங்கம் மட்டும் கூண்டிற்குள் வந்துவிட்டது. ஆனால் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா காலத்தில் குஜராத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட ஷேரு என்ற 12 வயதான ஆண் சிங்கம் கூண்டுக்குள் வரவில்லை. இதில் மற்ற விலங்குகளை பார்வையாளர்கள் நடந்து சென்றே பார்க்கலாம். ஆனால் லயன் சபாரியில் உள்ள சிங்கங்களை இரும்பு வளையம் அமைக்கப்பட்ட வேன்களில் மட்டுமே சென்று பார்க்க முடியும்.
இந்நிலையில், கூண்டிற்குள் மீண்டும் வராத குஜராத் சிங்கத்தால் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள், ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சடைந்தனர். மேலும் கூண்டிற்கு வர மறுத்த சிங்கத்தை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்காக பூங்கா மருத்துவ குழுவினர் சிங்கம் உலாவிடத்திற்கு சென்றனர். ஆனால் முடியவில்லை. இதில் பசி எடுத்தவுடன் சிங்கம் மீண்டும் கூண்டுக்குள் வரும் என்று அதிகாரிகள் காத்திருந்தனர்.
இந்நிலையில், லயன் சபாரியிலிருந்து திறந்து விடப்பட்ட குஜராத் சிங்கம் 5 நாட்களுக்கு பிறகு நேற்று மாலை ஆவேசத்துடன் கூண்டுக்குள் ஓடி வந்தது. இதனைக் கண்ட அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் நிம்மதி அடைந்தனர். இதன் காரணமாக, நேற்று மாலை அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.