குஜராத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட 3 பேருக்கு ஆயுள் தண்டனை... தலா ரூ.6 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு!!
குஜராத் : குஜராத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட 3 பேருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.18 லட்சம் அபராதமும் விதித்து கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2023ம் ஆண்டு குஜராத்தின் அம்ரேலி நகரைச் சேர்ந்த காசிம் சோலங்கி (20), சத்தார் இஸ்மாயில் (52) மற்றும் அக்ரம் ஹாஜி (30) ஆகிய 3 பேர், வீடுகளில் 40 கிலோ மாட்டிறைச்சி வைத்திருந்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கு குஜராத்தின் கீழமை நீதிமன்றத்தில், விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் மாட்டிறைச்சி வைத்திருந்த குற்றத்திற்காக, 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி, தலா ரூ.6 லட்சம் என 3 பேருக்கும் சேர்த்து மொத்தம் ரூ. 18 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். குஜராத்தில், மாட்டிறைச்சி வைத்திருந்ததாக 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்திருப்பது இதுவே முதல்முறை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
