கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் 118 ஏக்கரில் சென்னையின் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பூங்கா: முதற்கட்ட பணிகள் தொடக்கம்; தமிழ்நாடு அரசுக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு
சென்னை: சென்னை நகரில் கிண்டி ரயில் நிலையத்துக்கு அருகே 118 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சென்னையின் பல்வேறு அடையாளங்களில் ஒன்றாக கருதப்படுகிறது கிண்டியிலுள்ள ரேஸ் கிளப் மைதானம். சுமார் 160 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த மைதானம் ஆங்கிலேயர் காலத்தில் குதிரைப் பந்தயம் விடுவதற்காக 1945-ல் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. இந்நிலையில் 1970 முதல் 2014 வரையுள்ள வாடகை பாக்கியான சுமார் ரூ.730 கோடியே 86 லட்சத்தை கட்டத் தவறியதால் தமிழக அரசு குத்தகையை ரத்து செய்து நிலத்தை கையகப்படுத்தி, கடந்த ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி மைதானத்திற்கு சீல் வைத்தது.
இந்நிலையில், வேளச்சேரி ஏரி ஆக்கிரமிப்பு மற்றும் சீரழிவு தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதன் விசாரணையில், \\”அருகிலுள்ள கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தை சரியான முறையில் பயன்படுத்தி கொண்டால் என்ன?\\” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கான நடவடிக்கைகளில் இறங்குமாறு மாநகராட்சிக்கு அறிவுறுத்தினர். இது மட்டுமன்றி சமூக ஆர்வலர்களும் இந்த 160 ஏக்கர் நிலத்தில் நீர்நிலைகளை ஏற்படுத்த வேண்டும், அதன் மூலம் பருவமழை காலங்களில் ஏற்படும் பேரிடர்களில் இருந்து தப்பிக்க சிறந்த ஒரு தீர்வாக இருக்கும் என கூறி வந்தனர்.
அனைத்தையும் கருத்தில் கொண்டு தமிழக அரசு ஏற்கெனவே இங்கு மூன்று குளங்களை அமைத்து இருந்தது. அதனை தொடர்ந்து இரண்டு குளங்களை ஆழம் மற்றும் அகலப்படுத்தவும், தொடர்ந்து புதிதாக நான்கு குளங்களை அமைக்கும் பணியிலும் தமிழக அரசு இறங்கியது. இதற்கான பணிகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்று தற்போது 100% பணிகளையும் சென்னை மாநகராட்சி முடித்தது. அதாவது, 4.77 மில்லியன் கனலிட்டர் மழைநீரை தேக்கக்கூடிய வகையில் 27,647 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய குளங்கள் இங்கே உருவாக்கப்பட்டன.
அதனை தொடர்ந்து பெரிய அளவில் மழை பெய்தாலும் அதனைத் தாங்கும் அளவுக்கான சக்தி கொண்ட பெரிய குளங்கள் தோண்டப்பட்டு, 49,772 சதுர மீட்டர் பரப்பளவில் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. 8.66 மில்லியன் கன லிட்டர் மழைநீரை தேக்கி வைப்பதற்கான குளங்கள் இப்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதன்மூலம் தென்சென்னை குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் புகாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த குளங்கள் மூலம் அதிக அளவு மழைநீரை சேமிக்க முடியும். இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தொடர்ந்து தண்ணீர் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். மேலும், வெள்ளநீர் குடியிருப்புகளுக்குள் பாயாமல் இங்கேயே தேக்கி வைக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மேலும், சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்ற தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. பூங்காவில் மக்கள் பயன்பாட்டிற்கான பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன: இங்கு சுமார் இரண்டரை கிலோ மீட்டருக்கும் மேலான நீண்ட நடைபாதைகள் அமைக்கப்படும். மரங்கள் நிறைந்த இந்த பாதைகளில் நடைபயிற்சி மேற்கொள்ள பார்வையாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். பார்வையாளர்கள் மேலே சென்று பூங்காவின் அழகை ரசிக்க ‘ரேம்’ போன்ற அமைப்புகளும், பார்வையாளர் மாடங்களும் கட்டப்பட உள்ளன. முதற்கட்டப் பணிகளின் ஒரு பகுதியாக, தோட்டக்கலைத்துறை சார்பில் செடி நாற்றுகள் விற்பனை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இங்கு ரூ.15 முதல் ரூ. 1,500 வரை மதிப்புள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வகையான செடிகள் விற்கப்படுகின்றன. அதாவது இங்கு அடர்த்தியான மலர்கள் பூக்கும் மலர் செடிகள், உயரமாக வளரும் மரக்கன்றுகள், மருத்துவ குணம் கொண்ட செடிகள், குரோட்டன் போன்ற அலங்கார செடிகள் விற்கவும், அமைக்கப்படவும் உள்ளது. சென்னையின் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பூங்காவாக உருவாகும் இந்த இடம், மக்களுக்கு பெரும் பயனை அளிக்கக்கூடிய பசுமையான சுவாச இடமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
 
 
 
   