கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் சுதந்திர போராட்ட வீராங்கனை வேலு நாச்சியாருக்கு சிலை: முதல்வர் திறந்து வைத்தார்
சென்னை: கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள சுதந்திர போராட்ட வீராங்கனை வேலுநாச்சியார் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மன்னர் செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதி - முத்தாத்தாள் நாச்சியார் தம்பதியரின் மகளாக 1730ம் ஆண்டு பிறந்த வீரமங்கை ராணி வேலுநாச்சியார், சிறுவயதிலே வாள் வீச்சு, அம்பு விடுதல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம் போன்ற பல்வேறு போர்க்கலைகளை கற்று தேர்ந்தார். 1746ம் ஆண்டு சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை மணந்து, சிவகங்கை சமஸ்தானத்தின் ராணியானார்.
1772ம் ஆண்டு சிவகங்கையின் மீது ஆங்கிலேயர் போர் தொடுத்தபோது, மன்னர் முத்துவடுகநாதர் கடுமையாக போர் புரிந்தபோதும் சூழ்ச்சி காரணமாக வீர மரணமடைந்தார். பின்னர், வீரமங்கை வேலுநாச்சியார், மைசூர் மன்னர் ஹைதர் அலி, திப்பு சுல்தான் மற்றும் அக்காலத்தில் திண்டுக்கல் பகுதியை ஆண்ட கோபால் நாயக்கர் ஆகியோர் உதவியுடன் ஆங்கிலேயர்களுடன் போரிட்டு வென்று சிவகங்கை சீமையை 1780ம் ஆண்டு மீட்டார்.
அதன்பின், 16 ஆண்டுகள் சிவகங்கை சீமையை சிறப்பாக ஆட்சி செய்தார். ஆங்கிலேயர்களை எதிர்த்த வேலுநாச்சியார், 1796 டிச.25ம் தேதி அன்று மறைந்து அழியா புகழ் பெற்றார். தமிழ் மண்ணின் தலைசிறந்த வீராங்கனை வேலுநாச்சியாரின் வீரத்தை வருங்கால தலைமுறையினர் அறிந்து போற்றிடும் வகையில், 2024-25ம் ஆண்டு செய்தி மக்கள் தொடர்பு துறை மானிய கோரிக்கையில், சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் வேலுநாச்சியார் உருவ சிலை நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.50 லட்சம் செலவில் புதிதாக நிறுவப்பட்டுள்ள சுதந்திர போராட்ட வீராங்கனை வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் உருவ சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். பின்னர் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
* வேலூர் காவல் பயிற்சி பள்ளிக்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர்
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூகவலைதளப் பதிவு: இந்தியாவின் விடுதலைக்காக போராடிய முதல் பெண் போராளி - ஆங்கிலேயர்களை வெற்றி கொண்ட வீரமங்கை வேலுநாச்சியாரின் சிலையை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் திறந்து வைத்தேன்.
இந்த மகிழ்ச்சிமிகு நாளில், வேலூரில் உள்ள காவல் பயிற்சி பள்ளிக்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்படும் என பெருமிதத்துடன் அறிவிக்கிறேன். மண் - மானம் காக்க புயலென புறப்பட்ட வீரத்தாய் வேலுநாச்சியாரின் வரலாறும் - அவருக்கு துணை நின்ற மருது சகோதரர்கள் உள்ளிட்ட தீரமிக்க தமிழர்களின் வரலாறும், இந்த மண் யாருக்கும் தலைகுனியாது எனும் வரலாற்றை உரக்கச் சொல்லும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.