கூடலூர்: கூடலூர் அருகே காபி மற்றும் ஏலக்காய் தோட்டங்களில் முகாமிட்டுள்ள ஓவேலி ராதாகிருஷ்ணன் யானையை கண்காணிக்க 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட ஆரூற்றுப் பாறை, சுபாஷ் நகர், திருவள்ளுவர் நகர், பாரதி நகர், செல்வபுரம் மற்றும் தனியார் தோட்ட பகுதிகளான பார்வுட், எல்லன், நியூ ஹோப், கிளன்வன்ஸ் பகுதிகளில் மக்கள் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து வலம் வரும் ஓவிடி-1 ராதாகிருஷ்ணன் என்று அழைக்கப்படும் யானையை கண்காணிக்க முதுமலையில் இருந்து 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட மனித உயிர்களை பலி வாங்கிய இந்த யானை கடந்த சில ஆண்டுகளாக வனப்பகுதிக்குள் செல்லாமல் இங்குள்ள தனியார் காபி மற்றும் ஏலக்காய் தோட்டங்களுக்குள் முகாமிட்டு வருகிறது. இந்த யானை உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வனத்துறையினர் யானையை பிடித்து டாட்சிலிப் ஆனைமலை வனப்பகுதியில் விட வேண்டும். அல்லது பராமரிப்பு முகாம்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது குறித்து ஒவேலி மக்கள் இயக்கம் சார்பில் முதன்மை தலைமை வன உயிரின பாதுகாவலருக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை பாடந்துறை பகுதியில் கால்நடைகளை வேட்டையாடும் புலியை தேட முதுமலையில் இருந்து வரவழைக்கப்பட்ட கும்கி யானைகள் விஜய் மற்றும் வசீம் ஓவேலி பகுதிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதற்கிடையே ராதாகிருஷ்ணன் யானையை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.