கூடலூர் மைசூர் தேசிய நெடுஞ்சாலை பந்திப்பூர் வனப்பகுதியில் லாரியை மறித்து காய்கறிகளை தின்ற காட்டு யானைகள்
*போக்குவரத்து கடும் பாதிப்பு
கூடலூர் : ஊட்டியில் இருந்து கூடலூர் வழியாக மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு காய்கறி லாரியை காட்டு யானைகள் வழிமறித்து காய்கறிகளை நின்றதால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சாலையில் கக்கநல்லா- பந்திப்பூர் இடையே வனப்பகுதி வழியாக செல்லும் வாகனங்களை அடிக்கடி காட்டு யானைகள் வழிமறித்து அவற்றில் உணவு தேடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளன. இதனால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
இதேபோல் நேற்று இரவு சுமார் 7 மணியளவில் கர்நாடக எல்லை பந்திப்பூர் சோதனை சாவடிக்கு சற்று முன்பாக மைசூரில் இருந்து காய்கறி லோடு ஏற்றி வந்த சிறிய ரக சரக்கு லாரி ஒன்றை இரண்டு யானைகள் வழிமறித்துள்ளன. இதில் பயந்து போன ஓட்டுநர் லாரியை நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்து தப்பினார்.
யானைகள் லாரியின் அருகே நின்று உணவு தேடியதால் இருபுறமும் வாகன போக்குவரத்து தடைப்பட்டது. லாரியின் தார்ப்பாயை கிழித்து உள்ளே இருந்து காய்கறி மூட்டைகளை இழுத்து போட்டு தின்றன. இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வனத்துறையினர் அப்பகுதிக்கு வந்து யானைகளை விரட்டி போக்குவரத்தை சீரமைத்துள்ளனர்.

