Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கூடலூர் பகுதியில் வன விலங்கு தாக்குதலில் இருந்து பொதுமக்களை காக்க வேண்டும்

*கலெக்டரிடம் எம்எல்ஏ மனு

ஊட்டி : கூடலூர் பகுதியில் வன விலங்கு தாக்குதலில் இருந்து பொதுமக்களை காத்திட வேண்டும் என கூடலூர் அதிமுக எம்எல்ஏ பொன்ஜெயசீலன் தலைமையில் கூடலூர் பகுதி மக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

கூடலூர், தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் அனைத்து பகுதிகளிலும் யானைகள், மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து மக்களின் உயிருக்கும், விவசாய பயிர்களுக்கும், பெரும் சேதம் விளைவித்து வருகின்றது.

யானைகள் மட்டுமின்றி புலி, சிறுத்தை போன்ற வனவிலங்குகளும் இப்பகுதிகளுக்குள் அடிக்கடி வந்து ஏழை, எளிய, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வளர்த்து வரும் கால்நடைகளை கொன்று வருகின்றது. இதுவரை யானைகள் வராத பல இடங்களிலும் தற்போது சர்வ சாதாரணமாக யானைகள் வருகின்றன. பாடந்துரை பஜார் பகுதிக்கு தற்போது காட்டு யானைகள் வந்து செல்வது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனால், பொதுமக்கள் மிகுந்த அச்ச உணர்வுடன் நிம்மதியின்றி, உயிர் பயத்துடன் ஒவ்வொரு நாளையும் கடந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி இந்த மாதத்தில் மட்டும் இப்பகுதிகளில் வசிக்கும் எளிய மக்களின் 6 பசு மாடுகளை புலி தாக்கி கொன்றுள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் பலமுறை கோரிக்கைகள் வைத்தனர்.

பல முறை வீதியில் இறங்கி போராட்டங்களை நடத்தினர். ஆனால், வனத்துறையினர் யானைகள் மற்றும் வன விலங்குகளை முதுமலை புலிகள் காப்பத்திற்கு உட்பட்ட பகுதிக்குள் விரட்ட போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை.

மேலும், தேவர்சோலை பேரூராட்சியின் பல பகுதிகள் தேவர்சோலை எஸ்டேட் பகுதிக்குள் வருகிறது. தற்போது தேவர்சோலை எஸ்டேட் பகுதியை அதன் நிர்வாகம் முறையாக பராமரிக்காமல் உள்ளது.

இந்த தேயிலைத் தோட்டங்கள் பிரிவு 17 வகை நிலங்களாக உள்ள நிலையில் ஆங்காங்கே அடர்ந்த காடுகளாக மாறி உள்ளன. வனப்பகுதியில் குடியிருப்பு பகுதிகளுக்குள் வரும் யானைகள் பகல் நேரங்களில் தேயிலைத்தோட்டத்தின் அடர்ந்த புதர் மற்றும் தேயிலைத் காட்டுப் பகுதிகளுக்குள் பதுங்கிக்கொண்டு இரவு நேரங்களில் மக்கள் குடியிருக்கும் பகுதிகளிலும் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. மக்கள் வாழும் பகுதிகளுக்குள் உலா வருவது அன்றாட நிகழ்வாக மாறிவிட்டது. மேலும், வனத்துறையில் போதுமான பணியாளர்கள், மற்றும் ரோந்து வாகனங்கள் இல்லை.

இந்நிலையில் அரசுக்கு சொந்தமான பிரிவு 17 வகை நிலத்தில் அமைந்துள்ள தேவர்சோலை எஸ்டேட் பகுதியில் உள்ள புதர்கள் மற்றும் தேயிலைக்காடுகள் முழுவதையும் அகற்றிட வேண்டும். மக்கள் வசிக்கும் பகுதியினை பிரித்து தேவையான அனைத்து இடங்களிலும் அகழி மற்றும் சூரிய ஒளி மின்வேலி அமைத்து யானைகள் மற்றும் புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் ஊருக்குள் வராமல் தடுத்திடவும் நடவடிக்கை எடுக்க வேணடும்.

மேலும், புலிகளால் அடித்துக் கொல்லப்படும் பசு மாடுகளின் உரிமையாளர்களுக்கு உடனடியாக நிவாரணமாக ரூ.75 ஆயிரம் நிதியை வழங்கிட வேண்டும். அதுமட்டுமின்றி, வனத்துறைக்கு கூடுதல் பணியாளர்கள் மற்றும் வாகனங்கள் வழங்கிடவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், இப்பகுதியில் வன விலங்குகளின் தாக்குதலில் இருந்து மக்களின் உயிரையும், உடமைகளையும் காத்திட நிரந்தரமான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் எம்எல்ஏ ெஜயசீலன் கூறியுள்ளார்.