கொய்யாவில் கூடுதல் விளைச்சலுக்கு சில வழிமுறைகள் என்ற தலைப்பில் நவீன முறை கொய்யா சாகுபடிக்கான சில வழிமுறைகள் குறித்து கடந்த இதழில் கண்டோம். இதில் கொய்யாவின் ரகங்கள் குறித்தும், நிலம் தயாரிப்பு, நடவு முறை, நீர் மேலாண்மை உரம் மற்றும் சத்து மேலாண்மை, கவாத்து முறை உள்ளிட்ட தகவல்கள் விளக்கப்பட்டிருந்தன. இதன் தொடர்ச்சியாக பயிர் பாதுகாப்பு, அறுவடை உள்ளிட்ட தகவல்களை இந்த இதழில் பார்ப்போம்.
பயிர் ஒழுங்குபடுத்தல்
பயிர்களில் பொதுவாக பருவ கால விளைச்சல், குளிர் கால விளைச்சல் என இரு வகைகளில் விளைச்சல் நிகழும். பருவ கால விளைச்சலுடன் ஒப்பிடுகையில் குளிர் காலத்தில் பயிர்கள் தரம் உயர்ந்தும், அதிக விலைக்கும் போகும். இதனால் பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் பெரும்பாலும் பூக்களைக் கிள்ளி விடுவதன் மூலம் பருவ கால விளைச்சலைத் தவிர்க்கின்றனர். இதற்காக மாலிக் அமிலம், நாப்தாலிக் அமிலம் மற்றும் 2.4 டி (30 பிபிஎம்) ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். மேலும் வேர்களைக் கவாத்து செய்வதன் மூலமும், வேர்களை வெளியே எடுத்து விடுவதன் மூலமும், சில சமயம் கிளைகளை வளைத்து விடுவதன் மூலமும், தேவையற்ற இலைகளை வெட்டி விடுவதன் மூலமும் பூக்களை அரும்பச் செய்யலாம்.
பயிர் பாதுகாப்பு
பழ ஈக்களைக் கட்டுப்படுத்த மாலத்தியான் ஒரு லிட்டருக்கு பாஸ்போம்டான் 0.5 மி.லி. மருந்தினை நீரில் கலந்து தெளிக்க வேண்டும். மாவுப்பூச்சியை அழிக்க மாலத்தியான் ஒரு லிட்டருக்கு 2 மி.லி மரத்தை சுற்றி பாலித்தின் பையைக் கட்டிவிடுவதன் மூலம் தடுக்கலாம். நோய்களைப் பொறுத்த வரையில் வேரழுகல் மற்றும் இலைப்புள்ளி நோய் அதிக சேதத்தை விளைவிக்கும். இதனைக் கட்டுப்படுத்த குயினால் சல்பேட்டை ஊசி மூலம் செலுத்தலாம். அதேபோல காப்பர் ஆக்சிகுளோரைடை ஒரு லிட்டருக்கு 2 மிலி பயன்படுத்தலாம்.
அறுவடை
பதியன், காற்றடுக்குதல் மற்றும் ஒட்டு கட்டுதல் மூலம் நடப்பட்ட மரங்கள் 2 முதல் 3 ஆண்டில் காய்க்க தொடங்கும். பொதுவாக, பழங்களை பழுக்கும் நிலையில் மரத்தில் தக்க வைக்கக் கூடாது. அடர்பச்சை நிறத்தில் இருந்து வெளிரிய பச்சை அல்லது மஞ்சள் கலந்த பச்சை நிறமாக மாறும்போது அறுவடை செய்ய உகந்தது. ஒட்டு கட்டிய ஒரு மரத்தில் இருந்து 350 கிலோ வரை மகசூல் கிடைக்கும். 5 முதல் 7 ஆண்டுகள் வரை தொடர்ந்து மகசூல் கிடைக்கும். நாற்றுகள் மூலம் சாகுபடி செய்யப்படும் ஒரு மரத்தில் இருந்து 90 கிலோ பழங்கள் வரை கிடைக்கும்.
வடிகால் வசதி தேவை
கொய்யா இந்தியா முழுவதும் பயிரிடப்படும் வெப்ப மண்டல மற்றும் மித வெப்ப மண்டலப் பயிராக விளங்குகிறது. இது கடல் மட்டத்தில் இருந்து சுமார் ஆயிரத்து 500 மீட்டர் வரை உள்ள பகுதிகளில் வளரும் தன்மை கொண்டது. ஆண்டின் மழையளவு ஆயிரம் மி.மீ வரை உள்ள இடங்களில் மரத்தின் வளர்ச்சி நன்றாக இருக்கும். வண்டல் மண் தொடங்கி அனைத்து வகையான மண் மற்றும் காலநிலைகளில் சிறப்பாக வளரும். நல்ல வடிகால் வசதி உடைய நிலங்களில் சாகுபடி செய்வது உகந்ததாக இருக்கும்.
கொய்யா உற்பத்தி
நாட்டின் மொத்த பரப்பளவில் கொய்யா உற்பத்தி 2.5 லட்சம் எக்டர் பரப்பளவில் நடக்கிறது. இதன்மூலம் சுமார் 2.27 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.