சென்னை: ஒன்றிய அரசின் சரக்கு மற்றும் சேவை வரியில் ஏற்பட்ட சீர்த்திருத்தால் மதுபானங்களின் விலையில் மாற்றம் ஏற்படும் சூழல் உருவாக கூடும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் நடைமுறையில் இருந்த ஜிஎஸ்டி வரியில் மாற்றத்தை உருவாக்கி 5 மற்றும் 18 சதவீதம் வரி மட்டும் என ஒன்றிய அரசு சமீபத்தில் அறிவித்தது. மேலும், 40 சதவீத வரியையும் அறிமுகப்படுத்தியது.
இதில், சிகரெட் உள்ளிட்ட சில பொருட்களுக்கும் சில ஆடம்பர பொருட்களுக்கும் 40 சதவீதம் வரை ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஜி.எஸ்.டி வரி சீர்த்திருத்தம் மூலமாக தமிழகத்தில் மதுபானங்களின் விலை உயரும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் 4829 மதுபான கடைகள் உள்ளன. இதில் 551 வகையான பிராண்ட்களின் 302 வகை மதுபானங்கள் விற்கப்படுகிறது.
26 பீர் வகைகள், 223 ஒயின்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர எலைட் டாஸ்மாக் கடைகள் மூலம் வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது ஒன்றிய அரசு சீர்த்திருத்தி உள்ள ஜிஎஸ்டியில் சிகரெட் போல், 40% வரி விதிப்பின் கீழ் மதுபானம் வராவிட்டாலும், பாட்டில்கள், மூடிகள் மற்றும் லேபிள்களுக்கான ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, 12 முதல் 15% வரை இதற்கு முன்பு இருந்த வரி தற்போது 18 சதவீதமாக மாறியள்ளது. அதேபோல, போக்குவரத்து சேவைக்கான வரியும் 18% என்பதால் இது மதுபானங்களின் விலையில் உள்ளடங்கும் சூழல் உருவாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: மதுபானங்களுக்கான மாநில அரசின் வாட் வரி விதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நிலையில் ஜி.எஸ்.டியை வைத்து மதுவகைகளின் விலை உயர்த்துவது கிடையாது.
கலால் வரி போன்றவற்றை அடிப்படையாக கொண்டு தான் அவை உயர்த்தப்படும். ஆனாலும், மதுவகைகளின் விலை உயர்த்துவது தொடர்பான விவகாரங்கள் அரசின் கொள்கை முடிவை பொறுத்தவை. இந்த ஜி.எஸ்.டி வரி விதிப்பின் மாற்றாத்தால் மதுபானங்களின் விலையில் மாற்றங்கள் ஏற்படும் சூழலும் உண்டாகலாம். இல்லாமலும் இருக்கலாம். எனவே, அரசு எடுக்கும் முடிவே இறுதியானது. இவ்வாறு அவர் கூறினார்.