ஜி.எஸ்.டி சாலையில் அக்.17,18 ஆகிய 2 நாட்கள் கனரக வாகனங்களுக்கு தடை: தாம்பரம் மாநகர போக்குவரத்துக் காவல்துறை
சென்னை: தீபாவளியை முன்னிட்டு, அக்.17,18,21,22 ஆகிய தேதிகளில் கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து முனையத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக போக்குவரத்தில் மாற்றம் செய்து தாம்பரம் மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; தீபாவளி பண்டிகை விடுமுறையை முன்னிட்டு, கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை (KCBT) நோக்கிச் செல்லும் வாகனங்கள் விரைவாக செல்லவும், நகரில் நெரிசலைத் தவிர்க்கவும், பொதுமக்கள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக, தாம்பரம் மாநகர காவல்துறை, பின்வரும் போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் கனரக வாகனங்களுக்கான வழித்தட மாற்றங்களை அமல்படுத்தியுள்ளது.
அக்.17,18 ஆகிய தேதிகளில் பிற்பகல் 02.00 முதல் சென்னை மற்றும் ஆவடி பகுதிகளிலிருந்து வரும் கனரக வாகனங்கள் பூந்தமல்லியிலிருந்து திருப்பிவிடப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் -திருவண்ணாமலை திருக்கோவிலூர் வழியாக GST சாலையை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
மதுரவாயல் பகுதியிலிருந்து தாம்பரம். GST நோக்கி வரும் கனரக வாகனங்கள் மதுரவாயலில் திருப்பிவிடப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் - காஞ்சிபுரம் -திருவண்ணாமலை -திருக்கோவிலூர் வழியாக GST சாலையை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
காஞ்சிபுரத்திலிருந்து வாலாஜாபாத் வழியாக ஓட்டேரி நோக்கி வரும் கனரக வாகனங்கள் ஓரகடம் சந்திப்பில் திருப்பிவிடப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் திருவண்ணாமலை திருக்கோவிலூர் வழியாக GST சாலையை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
அதேபோல அக்.21,22ம் தேதிகளில் பிற்பகல் 02.00 மணிமுதல் செங்கல்பட்டு வழியாக வரும் கனரக வாகனங்கள் செங்கல்பட்டு-காஞ்சிபுரம் சாலை வாலாஜாபாத் காஞ்சிபுரம் → ஸ்ரீபெரும்புதூர் வழியாக → பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மூலம் சென்னை வந்தடையலாம்.
சிங்கப்பெருமாள் கோவில் வழியாக வரும் கனரக வாகனங்கள் ஒரகடம் ஸ்ரீபெரும்புதூர் வழியாகத் திருப்பிவிடப்பட்டு பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மூலம் சென்னை வந்தடையலாம்
இரும்புலியூர் பாலத்தின் அருகில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால், உடனடியாக கனரக வாகனங்கள், வன்டலூர் வெளிவட்டச் சாலை மற்றும் மதுரவாயல் புறவழிச்சாலை வழியாகத் திருப்பிவிடப்படும்.
அக்டோபர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில், விடுமுறை முடித்து நகரத்திற்குள் திரும்பும் பயணத்தை விரைவுப்படுத்த, காட்டாங்குளத்தூர், மறைமலைநகர் மற்றும் பொத்தேரி இரயில் நிலையங்களிலிருந்து, கூடுதல் புறநகர் இரயில்கள் இயக்கப்படுவதால், பயணிகள் இந்த ரயில் சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
புதுச்சேரி. கடலூர், சிதம்பரம், சீர்காழி, நாகப்பட்டினம், திருவாரூர். மயிலாடுதுறை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களுக்குப் பயணிக்கும் பயணிகள்: நெரிசலற்ற பயணத்திற்காக OMR மற்றும் ECR வழித்தடங்களைப், பயணிகள் புறப்பாடு மற்றும் திரும்பி வருதல் பயணத்திற்கு பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ரயில் போக்குவரத்து ஏற்பாடுகள்: சாலை நெரிசலைத் தவிர்க்க, சிறப்பு உள்ளூர் ரயில்கள் வழக்கமான இடைவெளியில் இயக்கப்படும். பயணிகள் இவற்றை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பேருந்து ஏற்பாடுகள்: பயணிகள் வசதிக்காக, கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து (2,092) சிறப்புப் பேருந்துகள், அக்.16 முதல் 19 வரை இயக்கப்பட உள்ளது.
எனவே, சீரான போக்குவரத்திற்காக, வாகன ஓட்டிகள் தாம்பரம் மாநகர போக்குவரத்துக் காவல்துறையினருடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.