Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஜி.எஸ்.டி. அதிகம் என்பதால் ஏலம் எடுக்க குத்தகைதாரர்கள் தயக்கம் கோயில்களில் பூஜை பொருட்கள் அறநிலையத்துறை நேரடி விற்பனை: குறைந்த விலையில் கிடைப்பதால் பக்தர்கள் மகிழ்ச்சி

நாகர்கோவில்: ஜி.எஸ்.டி. உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குத்தகை உரிமம் ஏலம் எடுக்காத கோயில்களில் அறநிலையத்துறையில் நேரடியாக பூஜை பொருட்களை விற்பனை செய்கிறார்கள். வழக்கத்தை விட விலை குறைவு என்பதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குமரி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் 400க்கும் மேற்பட்ட திருக்கோயில்கள் உள்ளன. இதில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகாவில் உள்ள கோயில்களும் குமரி மாவட்ட அறநிலையத்துறையின் கீழ் வருகின்றன.

இதில் கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், சுசீந்திரம் தாணுமாலயன்சுவாமி கோயில், நாகர்கோவில் நாகராஜா கோயில், மண்டைக்காடு பகவதியம்மன் கோயில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில், வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோயில், அழகம்மன் கோயில் மற்றும் 12 சிவாலயங்கள் உள்ளிட்ட ஏராளமான கோயில்கள் உள்ளன. இப்படி பிரசித்தி பெற்ற முக்கிய கோயில்களில் பூஜை பொருட்கள், பிரசாத ஸ்டால் அமைத்தல் உள்ளிட்டவை ஆண்டுதோறும் ஏலம் விடப்படும். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன் ஏலம் நடந்தது.

ஆனால், முக்கிய கோயில்களுக்கான ஏலத் தொகை அதிகம், 18 சதவீதம் வரை ஜி.எஸ்.டி. வருவதால் ஏலத் தொகையை குறைக்க வேண்டும் என கூறி குத்தகைதாரர்கள் ஏலம் எடுக்கவில்லை. இதனால் ஏலம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான மறு தேதி விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு தள்ளி வைக்கப்பட்ட குத்தகை ஏலத்தில் நாகர்கோவில் நாகராஜா கோயில் பூஜை பொருட்கள் விற்பனை, பார்க்கிங் கட்டணம் வசூல், சுசீந்திரம் கோயிலில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் பொருட்கள் விற்பனை செய்தல் உள்ளிட்ட குத்தகை உரிமம் முடிவு செய்யப்படவில்லை.

பூஜை பொருட்கள் குத்தகை உரிமம் முடிவு செய்யப்படாத கோயில்களில் அறநிலையத்துறை மூலமே நேரடியாக பூஜை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் குறைந்த விலைக்கு பூஜை பொருட்கள் வழங்கப்படுகின்றன. குத்தகைதாரர்கள் சிலர் தாறுமாறான கட்டணம் வைத்து பூஜை பொருட்களை விற்பனை செய்து வந்தனர். குறிப்பாக தேங்காய், பழம், பத்தி, சூடம், பூ மாலை என வைத்து ரூ.150, ரூ.200 என வசூலித்தனர். ஆனால் தற்போது ரூ.100க்கு பூஜை பொருட்கள் வழங்கப்படுகிறது. குறைந்த விலை என்பதால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கிறார்கள்.

குறிப்பாக நாகராஜா கோயிலில் அறநிலையத்துறை பணியாளர்களே நேரடியாக பூஜை பொருட்கள் விற்பனை செய்தனர். ரூ.100க்கு அனைத்து பூஜை பொருட்களும் கிடைத்ததால், பக்தர்கள் ஆச்சரியத்துடன் வாங்கி சென்றனர். இதே போல் வெள்ளி நாகம் உள்ளிட்டவை வைத்து ரூ.300க்கு விற்பனை செய்தனர். இதற்கு முன் ரூ.500க்கு மேல் விலை அதிகமாக இருந்ததாக பக்தர்கள் கூறினர். குத்தகை உரிமம் விடாமல் நேரடியாக அறநிலையத்துறையே இதற்கு என தனியாக பணியாளர்களை நியமனம் செய்து பூஜை பொருட்களை நியாயமான விலைக்கு விற்பனை செய்ய வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

* விலைப்பட்டியல் வைக்க வேண்டும்

பக்தர்கள் கூறுகையில், ‘குத்தகை உரிமம் ஏலம் வழங்கினாலும் கூட, குத்தகை எடுத்தவர்கள் விலை பட்டியல் வைத்து விற்பனை செய்ய உத்தரவிட வேண்டும். விலை பட்டியல் இல்லாமல் குத்தகைதாரர்கள் விற்பனை செய்தால் அதை ரத்து செய்ய வேண்டும். பக்தர்களின் நம்பிக்கையை சில குத்தகைதாரர்கள் பணமாக்கி வருகிறார்கள். இதை அறநிலையத்துறை தடுக்க வேண்டும்’ என்றனர்.

* தற்காலிக ஏற்பாடு

அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘அரசு உத்தரவின் படி பூஜை பொருட்கள் விற்பனையை குத்தகைக்கு தான் விட வேண்டும். குத்தகை உரிமம் முடிவடையாத முக்கிய கோயில்களில் பூஜை பொருட்களை அறநிலையத்துறை நேரடியாக விற்பனை செய்கிறது. இது தற்காலிக ஏற்பாடுதான். குத்தகை உரிமம் முடிவு செய்யப்பட்டதும், குத்தகை எடுத்தவர்கள் தான் பூஜை பொருட்களை விற்பனை செய்வார்கள்’ என்றனர்.