நொய்டா: நாட்டில் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் தொடரும். பொருளாதாரத்தை வலுப்படுத்துவதைத் தொடர்ந்து அனைத்து வரிகளைக் குறைப்போம். மக்களின் வரி சுமை மேலும் குறையும் என்று பிரதமர் மோடி கூறினார். உத்தரபிரதேசம், கிரேட்டர் நொய்டாவில் 5 நாள் சர்வதேச வர்த்தக கண்காட்சி நேற்று தொடங்கியது. இந்தக் கண்காட்சியில் 2,400க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளன. கண்காட்சியை தொடங்கி வைத்த பிரதமர் மோடி அங்கு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பார்வையிட்டார்.
கண்காட்சியில் ரஷ்யாவும் பங்கேற்றுள்ளது. இதில் மோடி பேசியதாவது: ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்தின் கீழ், அரசாங்கம் முந்தைய பல-அடுக்கு முறையிலிருந்து எளிமைப்படுத்தப்பட்ட 5% மற்றும் 18% ஜிஎஸ்டி என இரண்டு அடுக்குகளாகக் குறைத்துள்ளது. உணவு, மருந்துகள், சோப்பு, சுகாதாரம் மற்றும் ஆயுள் காப்பீடு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பல பொருட்கள் இப்போது வரி இல்லாததாகவோ அல்லது மிகக் குறைந்த வரி அடுக்கான 5%க்குள் வரும். முன்பு 12% வரி விதிக்கப்பட்ட பெரும்பாலான பொருட்கள் 5% அடுக்குக்கு மாற்றப்படவில்லை.
இந்த நடவடிக்கையால் இந்தியர்கள் இந்த ஆண்டு சுமார் ரூ.2.5 லட்சம் கோடியைச் சேமிப்பார்கள். பற்பசை முதல் டிராக்டர்கள் வரையிலான பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி வரி குறைப்பின் மூலம் நாங்கள் இந்திய மக்களின் வருமானத்தையும் சேமிப்பையும் அதிகரித்துள்ளோம். நாங்கள் இத்துடன் நிறுத்தப் போவதில்லை. நமது பொருளாதாரத்தை வலுப்படுத்துவதைத் தொடர்ந்து அனைத்து வரிகளைக் குறைப்பதைத் தொடர்வோம். ஜிஎஸ்டி சீர்திருத்தங்களின் செயல்முறை தொடரும்.
ஜிஎஸ்டியில் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் இந்தியாவின் வளர்ச்சி கதைக்கு புதிய சிறகுகளைத் தரும். ஜிஎஸ்டி பதிவு எளிதாகிவிடும், வரி தகராறுகள் குறையும். குறு,சிறு,நடுத்தர தொழில்கள் வளர்ச்சி பெறும். ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் ஒவ்வொரு பிரிவினருக்கும் நேரடியாக பயனளிக்கும் வகையில் சேமிப்பு மற்றும் வீட்டு நுகர்வு ஆகியவற்றை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. அவை அதிக வளர்ச்சி மற்றும் முதலீடுகளை ஊக்குவிக்கும். ஒவ்வொரு மாநிலம் மற்றும் பிராந்தியத்தின் முன்னேற்றத்தை துரிதப்படுத்தும்.
சில கட்சிகள் நாட்டு மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றன. கடந்த 2014 க்கு முன்பு ஆட்சி நடத்தி வந்த காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தங்கள் அரசாங்கத்தின் தோல்விகளை மறைக்க பொதுமக்களிடம் பொய் சொல்கின்றன.காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின் போது,வரி கொள்ளை நடந்தது. அதிக வரி சுமையால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
2014 ல் பிரதமராகப் பொறுப்பேற்ற பின் எனது அரசாங்கம் வரிகளைக் கணிசமாகக் குறைத்து, பணவீக்கத்தைக் குறைத்து, மக்களின் வருமானத்தையும் சேமிப்பையும் அதிகரித்துள்ளது. 2014 உடன் ஒப்பிடும்போது ஸ்கூட்டர்கள் ரூ.8,000 மலிவாகவும், மோட்டார் சைக்கிள்கள் ரூ.9,000 மலிவாகவும் கிடைக்கின்றன.
இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை விட நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களின் முன்னுரிமை அளிக்க வேண்டும். மாறிவரும் உலகில், ஒரு நாடு மற்றவர்களை எவ்வளவு அதிகமாகச் சார்ந்திருக்கிறதோ, அவ்வளவு அதிகமாக அவர்களின் வளர்ச்சி சமரசம் செய்யப்படும். இந்தியா இனி மற்ற நாடுகளைச் சார்ந்து இருக்க விரும்பவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
* ஏகே-203 துப்பாக்கி ஆலை
மேலும் பேசுகையில், நீண்டகாலமாக நீடித்து வரும் ரஷ்யாவுடனான கூட்டாண்மையை இந்தியா மேலும் வலுப்படுத்தி வருகிறது. உபியில் ஒரு பாதுகாப்பு வழித்தடம் உருவாக்கப்பட்டு வருகிறது. பிரம்மோஸ் ஏவுகணை உள்ளிட்ட ஆயுதங்களின் உற்பத்தி தொடங்கி விட்டது. ரஷ்ய ஒத்துழைப்புடன் நிறுவப்பட்ட தொழிற்சாலையில் ஏகே-203 ரக துப்பாக்கிகளின் உற்பத்தி விரைவில் தொடங்கும் என்றார்.