அவனியாபுரம்: மதுரை விமான நிலையத்தில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது; ஒன்றிய அரசு ஜிஎஸ்டி வரி விகிதத்தில் செய்துள்ள மாற்றங்களை வரவேற்கிறோம். இதுதொடர்பாக கடந்த 8 ஆண்டுகளாக ஒன்றிய அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை வைத்தோம். அவர்கள் எதையும் கேட்கவில்லை. தற்போது ஜிஎஸ்டியை குறைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த 2017ம் ஆண்டே ஜிஎஸ்டியில் பல்வேறு வரி விகிதங்கள் தவறானது என்று ஒன்றிய அரசுக்கு சுட்டிக்காட்டினோம். அப்போது தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்த அர்ஜூன் சுப்பிரமணியத்திடம், ஜிஎஸ்டியில் உள்ள பல்வேறு குளறுபடிகளை எடுத்துக் கூறினோம். பல தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள், இந்த தவறுகளை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அவைகளை இப்போது நீக்கி உள்ளார்கள்.
நடுத்தர, ஏழை, எளிய மக்களை கசக்கிப் பிழிந்த 18%, 28% வரிகளை தற்போது 5% சதவீதமாக குறைத்திருப்பது காலதாமதமான நடவடிக்கை. தற்போது 5% வரி பொருந்தும் பொருள்களுக்கு கடந்த காலங்களில் 12%, 18% வரி வசூலிக்கப்பட்டது. இவைகள் ஏன் கடந்த காலங்களில் பொருந்தவில்லை. எத்தனை ஆண்டுகளாக குறைக்காமல் தற்போது குறைத்துள்ளீர்கள். கடந்தாண்டு வரிச்சுமை என்பது தெரியாதா? இப்போதாவது மனம் திருந்தி வரி விகிதங்களை குறைத்ததற்கு பாராட்டுகிறேன். ஜிஎஸ்டியை மாற்றி அமைத்தது பீகார் தேர்தலா? மந்தமான வளர்ச்சியா? அல்லது டிரம்பின் வரி விதிப்பு கொள்கையா? இவ்வாறு சிதம்பரம் கூறினார்.