கொல்கத்தா: பல்வேறு அடுக்குகள் கொண்ட ஜிஎஸ்டி வரிகளை சீர்திருத்தம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்த போதிலும்ஒற்றை விகித ஜிஎஸ்டிக்கு நாடு தயாராக இல்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
கொல்கத்தாவில் ஒரு நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசுகையில்,‘‘5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என நான்கு விகித ஜிஎஸ்டி அமைப்பு தன்னிச்சையாக நிர்ணயிக்கப்படவில்லை. பல்வேறு மாநில அளவிலான வரிகளை அருகிலுள்ள அடுக்குகளுடன் இணைப்பதற்கான விரிவான முயற்சி மூலம் அது வந்தது.
ஜிஎஸ்டி மறுஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது, அடையாளம் காணப்பட்ட தேவைகளில் ஒன்று, ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினர்கள் நான்கு விகிதங்களை விரும்பவில்லை என்பதுதான். இருப்பினும், அவர்கள் இன்னும் ஒற்றை விகித சூழ்நிலைக்குள் நுழையத் தயாராக இருக்கிறார்களா என்ற கேள்விக்கு இன்னும் இல்லை என்று பதிலளிக்கப்பட்டது. ஒருவேளை எதிர்காலத்தில் எப்போதாவது இருக்கலாம்’’ என்றார்.