புதுடெல்லி: புகையிலை மீதான வரி விதிப்பு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. தற்போது, புகையிலை மற்றும் தொடர்புடைய பொருட்களுக்கு 28 சதவீத சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மற்றும் பல்வேறு விகிதங்களில் செஸ் வரி விதிக்கப்படுகிறது. ஜிஎஸ்டி இழப்பீட்டு வரி முடிவடைந்தவுடன் புகையிலை மற்றும் தொடர்புடைய பொருட்களுக்கு அதிக கலால் வரி விதிக்கும் மசோதா மத்திய கலால் (திருத்த) மசோதா, 2025 நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மக்களவையில் இந்த மசோதா குரல் ஓட்டெடுப்பு மூலம் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மாநிலங்களவையில் நேற்று காரசார விவாதம் நடந்தது.
இந்த விவாதத்திற்கு பதில் அளித்து ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில்,’ டிசம்பர் மாத இறுதியில் இழப்பீட்டு செஸ் வசூல் நிறுத்தப்படும். அதன்பின்னர் ஜிஎஸ்டி சட்டத்தில் புகையிலை பொருட்களுக்கு 40 சதவீத பிரிவின் கீழ் வரி விதிக்கப்படும். இதனால் எந்த இழப்பீடும் இருக்காது. புகையிலை மீது தற்போது விதிக்கப்படும் ஜிஎஸ்டி இழப்பீட்டு வரி டிசம்பர் இறுதியில் முடிவுக்கு வந்தவுடன் இந்த மசோதாவின் விதிகள் நடைமுறைக்கு வரும். விவசாயிகள் புகையிலையை கைவிட்டு பிற பணப்பயிர்களை வளர்க்க ஊக்குவிக்கப்பட்டு வருகிறார்கள்’ என்றார். பின்னர், மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றி மக்களவைக்கு திருப்பி அனுப்பப்பட்டது. இதன் மூலம் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
என்ன நடக்கும்?
* உற்பத்தி செய்யப்படாத புகையிலைக்கு 60-70 சதவீத கலால் வரி விதிக்க இந்த மசோதா முன்மொழிகிறது.
* சிகரெட், சுருட்டு உள்ளிட்டவற்றிக்கு 25 சதவீதம் அல்லது 1,000 சுருட்டுகளுக்கு ரூ.5,000, எது அதிகமாக இருக்கிறதோ அது வரை வரி விதிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
* சிகரெட்டுகளின் நீளம் மற்றும் தடிமனை பொறுத்து, 1,000 சிகரெட்டுகளுக்கு ரூ.2,700 முதல் ரூ. 11,000 வரை வரி விதிக்கப்படும்.
* அதே நேரத்தில் மெல்லும் புகையிலைக்கு கிலோவுக்கு ரூ.100 வரி விதிக்கப்படும்.
* இதனால் சிகரெட், மெல்லும் புகையிலை, சுருட்டுகள், ஹூக்கா, ஜர்தா மற்றும் வாசனை புகையிலை உள்ளிட்டவற்றிக்கு அதிக வரி விதிக்கப்படும்.

