புதுடெல்லி: ஜிஎஸ்டியில் செய்யப்பட்ட முக்கிய மாற்றங்கள் நாளை அமலுக்கு வருகிறது. நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 4 வரி விகிதமாக இருந்த ஜிஎஸ்டி 5% மற்றும் 18% என 2 விகிதங்களாக குறைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான அன்றாட பயன்பாட்டு பொருட்கள் 5 சதவீதத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன. இதுதவிர, பல உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆடம்பர மற்றும் உடல் நலத்திற்கு தீங்கான பொருட்கள் 40% சிறப்பு வரி விகிதத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த மாற்ம் நாளை முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. இதையொட்டி, திருத்தப்பட்ட ஜிஎஸ்டி விகிதங்கள் மற்றும் அமல்படுத்துதலில் பொதுமக்கள் புகார் தெரிவிக்க INGRAM எனும் புதிய இணையதளத்தை ஒன்றிய நுகர்வோர் விவகாரத்துறை நேற்று அறிமுகம் செய்துள்ளது. இதில் புதிய ஜிஎஸ்டி தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம்.