Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

2 அடுக்கு ஜிஎஸ்டிக்கு ஒப்புதல் புதிய வரி சீர்திருத்தத்தால் மாநில வருவாய் குறையக்கூடாது: ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் குழு வலியுறுத்தல், மக்களை பாதிக்காத வகையில் மாற்றம் செய்ய கோரிக்கை

புதுடெல்லி: ஒன்றிய அரசு செயல்படுத்த உத்தேசித்துள்ள 2 அடுக்கு ஜிஎஸ்டி சீர்திருத்தத்துக்கு அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. எனினும், இதனால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பீடு ஈடுகட்டப்பட வேண்டும். மாநில வருவாய் குறையக்கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக பரிந்துரையையும் இந்தக் குழு சமர்ப்பித்துள்ளது. ஜிஎஸ்டியில் தற்போது 5%, 12%, 18% மற்றும் 28 சதவீதம் என 4 அடுக்கு வரிப்பிரிவுகள் உள்ளன.

இந்த, 4 அடுக்கு விகிதங்களுக்குப் பதிலாக 5 சதவீதம் மற்றும், 18 சதவீதம் என இரண்டு அடுக்கு வரிப்பிரிவாக இதனை மாற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மக்களுக்கான தீபாவளி பரிசாக இருக்கும் என்று பிரதமர் மோடி இது குறித்து அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து 2 அடுக்கு ஜிஎஸ்டி குறித்த புதிய திட்டத்தை அமைச்சர்கள் குழுவுடன் ஒன்றிய அரசு பகிர்ந்து கொண்டது.

ஜிஎஸ்டி விகிதங்களை சீரமைப்பதற்கான அமைச்சர்கள் குழுவிடம் நிதியமைச்சகம் சமர்ப்பித்த முன்மொழிவில் , இனி 5 சதவீதம் மற்றும் 18 சதவீதம் என்ற 2 வரி பிரிவுகள் மட்டுமே அமலில் இருக்கும் எனவும், 28 சதவீத வரிப்பிரிவுக்குப் பதிலாக 40 சதவீத வரிப்பிரிவு அமல்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது. இதனிடையே, இந்த புதிய வரி அடுக்கு முறையை அமல்படுத்துவது குறித்த 2 நாள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் துவங்கியது. இதில் ஜிஎஸ்டி கவுன்சிலில் அங்கம் வகிக்கும் மாநில அமைச்சர்கள் பலர் பங்கேற்றனர்.

அதில், ஜிஎஸ்டி சீர்திருத்தம் குறித்து, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கினார். அப்போது, இன்சூரன்ஸ் மற்றும் இழப்பீடு செஸ் வரியில் மேற்கொள்ளப்பட உள்ள மாற்றங்கள் குறித்தும், அவசியம் குறித்தும் விளக்கினார். நேற்று 2வது நாளாக கூட்டம் நடந்தது. அதில், பீகார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி தலைமையிலான அமைச்சர்கள் குழு, ஜிஎஸ்டியில் உள்ள 4 வரி அடுக்குகளை , 2 அடுக்குகளாக குறைக்கும் ஒன்றிய அரசின் திட்டம் குறித்து விவாதித்தது.

இதுபோல் 40 சதவீத வரிப்பிரிவில் 5 முதல் 7 பொருட்களை சேர்ப்பது தொடர்பாகவும் முன்மொழிவை சமர்ப்பித்தது. இந்த குழுவில் பாஜ ஆளும் பீகார், உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலிருந்து 3 பேரும், எதிர்க்கட்சிகள் ஆளும் கர்நாடகா (காங்கிரஸ்), கேரளா (கம்யூனிஸ்ட்)) மற்றும் மேற்கு வங்கம் (திரிணாமுல் காங்.) ஆகிய மாநிலங்களிலிருந்து 3 பேரும் என 6 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த குழுவின் பரிந்துரைகள் ஜிஎஸ்டி கவுன்சிலில் முன்வைக்கப்பட்டு, இறுதி முடிவு எடுக்கப்படும்.

இந்நிலையில், கூட்டம் முடிந்த பிறகு, இதுதொடர்பாக பேட்டியளித்த பீகார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி, ‘‘ஒன்றிய அரசின் 2 வரி அடுக்கு முடிவை ஏற்பதாக குழு முடிவு செய்துள்ளது. 12 மற்றும் 28 சதவீத வரி அடுக்குகளை நீக்குவதற்கான ஒன்றிய அரசின் முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது தவிர, நாங்கள் சில பரிந்துரைகளை வழங்கியுள்ளோம்’’, என்றார்.

உத்தரபிரதேச நிதியமைச்சர் சுரேஷ் குமார் கன்னா, ‘‘அனைத்து மாநிலங்களும் ஒன்றிய அரசின் முன்மொழிவை வரவேற்றன. எனினும், புதிய வரி சீர்திருத்தம் செயல்பாட்டுக்கு வரும்போது மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்ய வேண்டும் என சில மாநிலங்கள் வலியுறுத்தின’’, என்றார். மேற்கு வங்க நிதியமைச்சர் சந்திரிமா பட்டாச்சார்யா கூறுகையில், ‘‘ஒன்றிய அரசின் முன்மொழிவில் மாநில வருவாய் இழப்பு சேர்க்கப்படவில்லை.

ஒன்றிய அரசின் திட்டத்துக்கு நாங்கள் ஒப்புதல் அளித்துள்ளோம் எனினும், இது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இருப்பதோடு, மாநிலங்களுக்கு எவ்வளவு வருவாய் இழப்பு ஏற்படும் என்பதையும் தெரிவிக்க வேண்டும்’’, என்றார்.  இதுபோல், வரி சீர்திருத்தத்துக்கு ஆதரவளிப்பதாக தெலங்கானா துணை முதல்வர் விக்ரமார்கா கூறியுள்ளார்.