Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஜிஎஸ்டி திருத்தம் மூலம் மக்கள் மீதான சுமை குறைந்ததில் மகிழ்ச்சி: சசிகலா அறிக்கை

சென்னை: ஜிஎஸ்டி திருத்தம் மூலம் மக்கள் மீதான சுமை குறைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என சசிகலா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி இதுநாள் வரை 5%, 12%, 18% மற்றும் 28% ஆகிய 4 அடுக்குகளின் கீழ் வரிகள் இருந்த நிலையில் தற்போது இதனை 4 அடுக்கிலிருந்து 2அடுக்குகளாக அதாவது 5% மற்றும் 18% என திருத்தம் செய்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. ஒன்றிய அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் மூலம் நாட்டு மக்களின் மீதுள்ள சுமை குறைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

நாட்டு மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்தால் சமையலறைப் பொருட்கள், மின்னணு பொருட்கள், மருந்துகள், விவசாயத்திற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் ஆட்டோமொபைல்கள் வரை பல பொருட்களின் விலையானது குறைந்துள்ளது. குறிப்பாக, நெய், பனீர், வெண்ணெய், பிரெட் உள்ளிட்ட பல உணவுப் பொருட்களின் விலையும், டிவி, ஏசி, வாஷிங் மெஷின்கள் போன்ற பல வீட்டு அத்தியாவசிய பொருட்களின் விலையும் குறைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அதேபோன்று தினசரி பயன்பாட்டுப் பொருட்களான ஹேர் ஆயில், டாய்லெட் சோப், ஷாம்பு, டூத் பேஸ்ட் போன்றவற்றின் மீதான வரியும் 5 சதவீதமாக குறைக்கப்பட்டு தற்போது அமலுக்கு வந்துவிட்டன.

ஒன்றிய அரசு செய்துள்ள ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்தில் விவசாயத்திற்கு தேவையான உரப்பொருட்களுக்கு 5% அளவுக்கு வரி குறைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாக இருப்பினும், ஏழை, எளிய விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு உரப்பொருள்களுக்கு ஜிஎஸ்டியிலிருந்து முற்றிலுமாக வரிவிலக்கு செய்ய வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலனை பொதுமக்கள் முழுமையாக அடையும் வகையில் ஜிஎஸ்டி வரி விகிதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு ஏற்ப விற்பனையாளர்கள் விற்பனை விலையில் மாற்றம் செய்து சம்பந்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்கிறார்களா? என்பதை தொடர்ந்து கண்காணித்திடதேவையான நடவடிக்கைகளை ஒன்றிய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும். இவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார்.