புதுடெல்லி: செப்.22 முதல் ஜிஎஸ்டி வரி விகிதங்கள் மாற்றிய பின்னர் டூத்பேஸ்ட்,ஷாம்பூ முதல் கார்கள், தொலைக்காட்சிகள் உள்பட 375 பொருட்களின் விலைகள் குறைந்துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில்,’ வரி குறைப்பால் குளிர்சாதனபெட்டிகள், வாஷிங் மெஷின், தொலைக்காட்சி ஆகியவற்றின் விற்பனைகள் அதிகரித்துள்ளன.
சில பொருட்களைப் பொறுத்தவரை, வணிகங்கள் சராசரி ஜிஎஸ்டி விகிதக் குறைப்பு நன்மைகளை விட அதிகமாக நுகர்வோருக்கு வழங்கியுள்ளன’’ என்றார். ரூ.20 லட்சம் கோடி விற்பனை: அஸ்வினி வைஷ்ணவ்,‘‘ ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால் மின்னணு நுகர்வு அதிகரிக்கும் என அரசு எதிர்பார்க்கிறது. இந்த ஆண்டு நுகர்வு 10 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம். கடந்த ஆண்டை விட ரூ.20 லட்சம் கோடி கூடுதல் நுகர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது’’ என்றார்.