Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஜி.எஸ்.டி. விகிதத்தை மறுசீரமைக்க தமிழ்நாடு அரசு ஒத்துழைக்கும்: அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி!

டெல்லி: ஜி.எஸ்.டி. விகிதத்தை மறுசீரமைக்க தமிழ்நாடு அரசு ஒத்துழைக்கும் என டெல்லியில் அமைச்சர்களின் ஜிஎஸ்டி குழு கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். டெல்லியில் ஆயுள் மற்றும் சுகாதார காப்பீட்டிற்கான அமைச்சா்கள் குழுக் கூட்டம் மற்றும் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி இழப்பீட்டு மேல்வரியினை மறுஉருவாக்கம் செய்வதற்கான அமைச்சா்கள் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், தமிழ்நாடு நிதி மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் பங்கேற்றுப் பேசியது;

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விகிதங்களை சீரமைக்கும் முனைவுகள் வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில், மாநிலங்களின் நிதி ஆதாரங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். தமிழ்நாடு உட்பட பல மாநிலங்கள் பெரும் உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், இதற்கான செலவினங்களைக் குறைக்கும் வகையில் வரிசீரமைப்பு வழிவகுக்கக்கூடாது. குறிப்பாக சமூக நலத்துறையில், தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் சுகாதாரம் மற்றும் கல்வியில் முதலீடு செய்வதன் மூலம் முழு மனித ஆற்றலையும் அடைவதற்கான வழியைக் காட்டுகின்றன. எனவே மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொள்ளும் வரிசீரமைப்பு முனைவுகள் ஒவ்வொரு மாநிலத்தின் வருவாயை பாதுகாக்கும் விதமாக அமைந்திட வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விகிதங்களை சீரமைக்கும், தருணத்தில் இழப்பீட்டு மேல்வரியும் முடிவுக்கு வரவுள்ளது. ஒரே நேரத்தில், சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விகிதக் குறைப்பு மற்றும் இழப்பீட்டு மேல்வரியினை நீக்குவது ஆகியன மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும். எனவே, சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விகித மறுசீரமைப்பு காரணமாக மாநிலங்களுக்கு ஏற்படக்கூடிய வருவாய் இழப்பை ஈடுசெய்ய இழப்பீட்டு மேல்வரியினை நீட்டிக்க வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

தற்போது மேல்வரி விதிக்கப்பட்டு வரும் பொருட்கள் மீது, இழப்பீட்டு மேல்வரியினை தொடர இயலாத நிலையில், மாநிலங்களுக்கு ஏற்படக்கூடிய வருவாய் இழப்பை குறைப்பதற்கு, மாற்று வழிமுறை செய்யப்பட வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார். இழப்பீட்டு மேல்வரியினை 4 முதல் 6 ஆண்டுகள் வரையிலான காலத்திற்கு வருவாய் இழப்பை ஈடுசெய்ய மாநிலங்களுக்கு மட்டும் முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்றும் உடனடி தீர்வாக மாநிலங்களின் நிகர கடன் உச்சவரம்பை மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவிகிதமாக எவ்வித நிபந்தனையும் இல்லாமல் உயர்த்தப்பட வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

மாநில வருவாய் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு, சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விகிதத்தை மறுசீரமைப்பதில் தேவையான ஒத்துழைப்பை தமிழ்நாடு அரசு வழங்கும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.