டெல்லி: நாட்டில் தற்போது 4 விகிதங்களாக உள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பை 2 விகிதங்களாக குறைக்க டெல்லியில் மாநில அமைச்சர்களின் ஜிஎஸ்டி குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முறைமுக வரியை எளிமைப்படுத்தக் கடந்த 2017ல் ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டது. நாட்டில் இப்போது 5%, 12%, 18%, மற்றும் 28% என 4 பிரிவுகளில் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.
இதுபோக அத்தியாவசியப் பொருட்களுக்கு வரி விலக்கும் அளிக்கப்படுகிறது. இருப்பினும் தற்போதுள்ள நடைமுறையில் பல பொருட்களுக்கு வரிகள் அதிகமாக இருப்பதால் அதைக் குறைக்க வேண்டும் என்றும் ஜிஎஸ்டி முறையில் சீர்திருத்தங்கள் தேவை என்றும் பலரும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், ஜிஎஸ்டி முறையில் மிகப்பெரிய சீர்திருத்தம் கொண்டு வரப்படும் என்று பிரதமர் மோடி, சுதந்திர தின உரையில் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து ஒன்றிய அரசும் 12% மற்றும் 28% வரி அடுக்கை நீக்கப் பரிந்துரை அளித்திருந்தது. இதற்கிடையே இந்த பரிந்துரைக்கு ஜிஎஸ்டி அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த கட்டமாக இது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முன்மொழியப்படும். அடுத்த மாதம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அப்போது இது அங்கு முன்மொழியப்படும். அங்கும் இதற்கான ஒப்புதல் கிடைத்தால், இதன் மூலம் பல்வேறு பொருட்கள் மீதான வரி குறையும்.