சென்னை: ஜிஎஸ்டி வரிகுறைப்பால் ஆவின் பால் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 5%,, 18% ஆகிய இரு விகித ஜிஎஸ்டி வரி குறைப்பு நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. குறிப்பாக உறைகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் பால்களுக்கு தொடக்கம் முதலே ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படவில்லை.
அதே நேரத்தில் பன்னீர், ஐஸ்கிரீம், சுவையூட்டப்பட்ட பால் வகைகள், நெய், வெண்ணெய் உள்ளிட்ட பால் பொருள்களுக்கு 12% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வந்தது. ஜி.எஸ்.டி வரிச் சீர்திருத்தங்களின் ஒரு கட்டமாக பால் பொருள்கள் மீதான ஜி.எஸ்.டி வரி 5% ஆக குறைக்கப்பட்டு விட்டது. இதனைத் தொடர்ந்து, பல்வேறு தனியார் நிறுவனங்களும் தங்கள் உற்பத்திப் பொருட்களின் விலைகளை குறைத்து வரும் நிலையில், தமிழக அரசின் ஆவின் நிறுவனம் தனது பால் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது.
அதன் விபரம் பின்வருமாறு: பன்னீர் அரை கிலோ 300க்கு விற்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ரூ.275க்கு விற்பனை செய்யப்படும். அது போல் பன்னீர் 200 கிராம் ரூ.120க்கு விற்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முதல் ரூ.10க்கு விலை குறைந்தது. அது போல் நெய் ஒரு லிட்டர் ரூ 700க்கு விற்கப்பட்டிருந்த நிலையில் ரூ.660க்கு இனி விற்கப்படும். நெய் 50 மில்லி ரூ.48. நேற்று முதல் ரூ.45க்கு விற்பனையாகிறது. அது போல் நெய் 5 லிட்டர் டின் ரூ.3600 இருந்த நிலையில் தற்போது ரூ 3250க்கு விற்பனை செய்யப்படுகிறது. நெய் 15 கிலோ டின் விலை ரூ 11880ஆக இருந்த நிலையில் தற்போது ரூ 10,725-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நெய் 50 எம்எல் தற்போது ரூ.48க்கும், 100 எம்எல் ரூ.85க்கும், 200 எம்எல் ரூ.160க்கும், 500 எம்எல் ரூ.345க்கும், 1000 எம்எல் ரூ.660க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பன்னீர் 500 கிராம் ரூ.275க்கும், 200 கிராம் பன்னீர் 120க்கும் விற்பனை செய்யப்படுகிறது என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.