டெல்லி: செப்டம்பர் 3 மற்றும் 4ம் தேதிகளில் நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டத்தில் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி விகிதங்கள் கணிசமாக குறைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, அனைத்து உணவு மற்றும் ஜவுளி பொருட்களையும் 5% ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல சிமெண்ட் மீதான வரி 28%-லிருந்து 18%ஆக குறைக்கப்பட உள்ளது.
மேலும், தனிநபர் ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டு பிரீமியங்களுக்கான ஜிஎஸ்டியை பூஜ்ஜியமாக்குவதற்கான முக்கிய பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. அதேபோல நுகர்வோர் அதிக அளவில் பயன்படுத்தும் நடுத்தர மற்றும் உயர்தர அழகு நிலையங்கள் மற்றும் சலூன்களுக்கான வரி 18%லிருந்து, 5%ஆக குறைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு வரி விகிதங்களுக்கு உட்பட்ட TV, AC, Bridge போன்றவை அனைத்தும் 18% வரி வரம்புக்குள் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறிய ரக கார்களுக்கான வரி 18%ஆகவும், பெரிய கார்களுக்கான வரி 22%, செஸ் உள்பட 40%ஆகவும் மாற்றி அமைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.