Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஜிஎஸ்டி 2.0 வரி மாற்றத்தால் எந்தெந்த பொருட்கள் எவ்வளவு விலை குறையும்..? டிவி, ப்ரிட்ஜ், வாஷிங்மெஷின் ரூ.1000 முதல் ரூ.5000 வரை குறையும்; செல்போன் வரியில் மாற்றமில்லை; பைக், கார்கள் விலை குறையும்

புதுடெல்லி: ஜிஎஸ்டி வரி மாற்றத்தால் வரும் 22ம் தேதி முதல் டிவி, ப்ரிட்ஜ், வாஷிங்மெஷின் போன்றவற்றின் விலை ரூ.1000 முதல் ரூ.5000 வரை குறையப் போகிறது. செல்போனுக்கு வரியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பைக், கார்களின் விலை ரூ.6 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை குறையும் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பை கொண்டு வர சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) ஒன்றிய அரசு கடந்த 2017ம் ஆண்டு அமல்படுத்தியது. இதில், 5%, 12%, 18%, 28% என 4 அடுக்கு வரி விகிதங்கள் இருந்தன. உணவுப் பொருட்கள் உள்ளிட்டவைகளுக்கு பூஜ்ஜிய வரி இருந்தது. இந்நிலையில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு ஜிஎஸ்டியில் தற்போது முக்கிய சீர்த்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 4 ஆக இருந்த வரி அடுக்குகள் 5% மற்றும் 18% என 2 அடுக்குகளாக குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது.

இதுதவிர, பல அன்றாட பயன்பாட்டு பொருட்கள் பூஜ்ஜிய வரி விகிதத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன. புகையிலை, சிகரெட் உள்ளிட்ட உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கும், ஆடம்பர பொருட்களுக்கும் 40% என்ற சிறப்பு வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய ஜிஎஸ்டி 2.0 நாடு முழுவதும் வரும் 22ம் தேதி முதல் அமலுக்கு வரும் என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

மொத்தம் 396 பொருட்கள் ஜிஎஸ்டி வரி சீர்த்திருத்தத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் 285 பொருட்கள் 18% வரம்புக்குள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றில் ஏழை, நடுத்தர மக்கள் பயன்படுத்தும் பல அன்றாட வீட்டு உபயோக பொருட்கள் விலை குறைய உள்ளன. குறிப்பாக, டிவி, ப்ரிட்ஜ், வாஷிங்மெஷின், ஏசி, டிஷ்வாசர், வாக்கூம் கிளீனர், மைக்ரோவேவ் ஒவன், இன்டக்ஷன் குக்கர், ரைஸ் குக்கர் போன்ற மின்சார சமையல் சாதனங்கள், கிரைண்டர்கள், மிக்சி, ஹேர் டிரையர், அலங்கார விளக்குகள் போன்றவை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீத அடுக்குகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால் டிவி, ப்ரிட்ஜ், வாஷிங்மெஷின் ஆகியவற்றின் விலை ரூ.1000 முதல் ரூ.5000 வரை குறையும் என கூறப்படுகிறது.

உதாரணத்திற்கு 40 இன்ச் டிவியின் விலை ரூ.22,000 ஆக இருக்கும் நிலையில், 28 சதவீத ஜிஎஸ்டியாக ரூ.6,160 சேர்த்து ரூ.28,160 ஆக விற்பனை செய்யப்பட்டது. தற்போது 18 சதவீதமாக ஜிஎஸ்டி குறைக்கப்பட்டிருப்பதால் ஜிஎஸ்டி ரூ.3,960 சேர்த்து ரூ.25,960 ஆக விற்கப்படும். இதன் மூலம் ரூ.2,200 வரை விலை குறையும். இதே போல, ஏசிக்களின் விலை ரூ.1,500 முதல் ரூ.3,500 வரை குறையும். 2 டன் ஏசிக்கள் வாங்கும் போது ரூ.3,516 விலை குறையும்.

இதே போல சிறிய ரக கார்கள் (1200 சிசிக்கு குறைவானவை), பைக்குள் (350 சிசிக்கு குறைவானவை) ஆகியவற்றின் ஜிஎஸ்டி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது ரூ.80000 உள்ள பைக்கின் விலையில் ரூ.6,000 வரை குறையும். ரூ.1.25 லட்சம் உள்ள பைக்குகளின் விலை ரூ.10 ஆயிரம் வரை குறையும். இதே போல ரூ.4.25 லட்சம் உள்ள கார்களின் விலையில் ரூ.34 ஆயிரமும், ரூ.7.5 லட்சம் உள்ள கார்களின் விலை ரூ.60 ஆயிரமும் குறையும்.

சுற்றுலாவை ஊக்குப்படுத்தும் வகையில் ஓட்டல் அறைகள் 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது ரூ.1000க்கு கீழ் உள்ள ஓட்டல் அறைகளுக்கு ஜிஎஸ்டி கிடையாது. ரூ.1000க்கு மேல் ரூ.7,500க்குள் கட்டணம் உள்ள அறைகளுக்கு 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ரூ.500 வரை விலை குறையும். இதே போல, எகானமி விமான டிக்கெட்களின் கட்டணம் 12 சதவீத ஜிஎஸ்டியில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. பிசினஸ் கிளாஸ் டிக்கெட் கட்டணம் 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

நீண்ட கால கோரிக்கையாக இருந்த சிமென்ட்களும் அன்றாட பயன்பாட்டு பொருட்கள் பட்டியலில் கொண்டு வரப்பட்டு அதன் ஜிஎஸ்டி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு மூட்டை சிமென்ட் விலையில் ரூ.30 வரை குறையும். ஐஸ்கிரீம், சாக்லெட் ஆகியவை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீத வரிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால், 1 லிட்டர் ஐஸ்கிரீம் விலை ரூ.33 வரை குறையும், 1 கிலோ சாக்லெட் கேக்களின் விலை ரூ.94 வரை குறையும்.

வெண்ணெய், நெய், சீஸ், பழச்சாறு, ஜாம், பேரீச்சம் பழம் ஆகியவற்றின் ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் 100 கிராம் வெண்ணெய் வாங்கினால் ரூ.4 வரை விலை குறையும். 1 லிட்டர் மிக்சட் ப்ரூட் ஜூஸ் விலை ரூ.8 வரை குறையும். இதுதவிர, ரோட்டி, சப்பாத்தி, பீட்சா பிரட், 33 உயிர் காக்கும் மருந்துகள், பன்னீர் உள்ளிட்டவைகள் பூஜ்ஜிய ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. செல்போன்களுக்கு தற்போது 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இந்தியாவில் செல்போன் பயன்பாடு மற்றும் உற்பத்தி கணிசமாக அதிகரித்து வரும் நிலையில், இதன் ஜிஎஸ்டி குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், செல்போனுக்கான ஜிஎஸ்டியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால் அத்துறையினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

பாப்கார்ன் பிரச்னைக்கு தீர்வு

சமீபத்தில் பாப்கார்னுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது பெரும் பேசுபொருளானது. அதிலும், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பிராண்டட் பாப்கார்னுக்கு 12 சதவீத வரியும், பாக்கெட் இல்லாத பாப்கார்ன்களுக்கு 5 சதவீத வரியும், கேரமல் (இனிப்பு) பாப்கார்னுக்கு 18 சதவீத வரியும் என வெவ்வேறு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. தற்போது இப்பிரச்னை தீர்க்கப்பட்டுள்ளது. அனைத்து விதமான பாப்கார்ன்களும் 5 சதவீத வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

சிகரெட் விலை அதிகரிக்கும்

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை பாவப் பொருட்கள் என குறிப்பிட்டு அவைகள் 40 சதவீத சிறப்பு வரி வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவற்றில் சிகரெட்டும் ஒன்று. இதற்கு முன் சிகரெட்களுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது. இனி அவைகளுக்கு 40 சதவீத வரி விதிக்கப்படும். இதனால் ரூ.19 ஆக இருக்கும் சிகரெட் விலை ரூ.22 வரை உயரக் கூடும். ரூ.10 ஆக உள்ள சிகரெட் விலை ரூ.11 ஆக அதிகரிக்கும்.

40 சதவீத வரி வரம்பில் உள்ள பொருட்கள்

பான் மசாலா

குட்கா

மெல்லும் புகையிலை

சிகரெட்டுகள்

சிகார்கள்

கார்பனேற்றப்பட்ட பானங்கள்

சர்க்கரையுடன் கூடிய குளிர் பானங்கள்

காபின் கலந்த கார்பனேற்றப்பட்ட பானங்கள்

1200 சிசிக்கு மேல் எஞ்சின் திறன் கொண்ட பெட்ரோல் கார்கள்

1500 சிசிக்கு மேல் எஞ்சின் திறன் கொண்ட டீசல் கார்கள்

350 சிசிக்கு மேல் எஞ்சின் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்கள்

சொகுசு படகுகள் ஹெலிகாப்டர்கள் உட்பட தனிப்பட்ட விமானங்கள்

நிலக்கரி, லிக்னைட்

ஆன்லைன் சூதாட்டம் மற்றும் கேமிங் சேவைகள்

60 பொருட்களுக்கு விலக்கு

புதிய ஜிஎஸ்டியில், அனைத்து விதமான தனிநபர் இன்சூரன்ஸ் பிரீமியங்களும் 18 சதவீத ஜிஎஸ்டியில் இருந்து பூஜ்ஜியமாக்கப்பட்டுள்ளன. இதே போல, 33 உயிர் காக்கும் மருந்துகள் உட்பட 60 பொருட்கள் பூஜ்ஜிய வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

அதிக-உயர் வெப்பநிலை (யுஎச்டி) பால்

பிட்சா ரொட்டி

சப்பாத்தி அல்லது ரோட்டி

பரோட்டா

அழிப்பான்கள்

33 மருந்துகள்

புற்றுநோய், அரிய நோய்கள் மற்றும் பிற கடுமையான நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் 3 உயிர்காக்கும் மருந்துகள்

வரைபட புத்தகம்

ஆய்வக குறிப்பேடு

குறிப்புப் புத்தகங்கள்

வரைபடங்கள், குளோப்கள், அச்சிடப்பட்ட அனைத்து வகையான வரைபடங்கள் மற்றும் ஹைட்ரோகிராபிக் விளக்கப்படங்கள்

உலோகமயமாக்கப்பட்ட நூல் செனில் நூல், லூப் வேல்-நூல்ஷார்ப்பனர்கள், பென்சில்கள் கிரேயான்ஸ், ஒட்டும் பொருட்கள் சாக்பீஸ்கள்

எந்தெந்த பொருட்களுக்கு 40% வரி விதிக்கப்படும்?

ஆடம்பர மற்றும் உடலுக்கு தீங்கான பொருட்களுக்கு 40 சதவீத ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் உள்ள பெரும்பாலான பொருட்களுக்கு தற்போது 28 சதவீத வரி விதிக்கப்படும் நிலையில் இனி 40 சதவீதமாக அதிகரிக்கப்பட உள்ளது. உதாரணத்திற்கு 1200 சிசிக்கு மேல் உள்ள கார்கள், 350 சிசிக்கு மேல் உள்ள பைக்களின் விலை கணிசமாக உயரும். ரூ.3.35 லட்சம் விலையுள்ள புல்லட் பைக்குகள் ரூ.31,000 விலை அதிகரிக்கும். ரூ.12.30 லட்சம் விலையுள்ள கார்களின் விலையில் ரூ.1.15 லட்சம் அதிகரிக்கும். ரூ.35 லட்சத்திற்கு மேல் விலையுள்ள கார்களை வாங்கினால் கூடுதலாக ரூ.3.40 லட்சம் செலுத்த வேண்டியிருக்கும்.