நாட்டின் 79வது சுதந்திர தின விழாவில், சென்னையில் தேசிய கொடி ஏற்றி வைத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். நாட்டின் விடுதலைக்காக போராடிய தியாகிகளுக்கான ஓய்வூதியம் ரூ.22 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும், தியாகிகளுக்கான குடும்ப ஓய்வூதியம் ரூ.12 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். வீரபாண்டிய கட்டபொம்மன் வழித்தோன்றல்கள், முன்னாள் ராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதியின் வழித்தோன்றல்கள், சிவகங்கை மருது சகோதரர்களின் வழித்தோன்றல்கள் ஆகியோர் பெற்று வரக்கூடிய மாதாந்திர ஓய்வூதியம் ரூ.11 ஆயிரமாக உயர்த்தப்படும்.
இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த முன்னாள் படை வீரர்களுக்கு வழங்கப்படும் ஆயுட்கால மாதாந்திர நிதி உதவி ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்படும். இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற வீரர்களின் கைம்பெண்களுக்கு வழங்கப்படும் ஆயுட்கால மாதாந்திர நிதி உதவி ரூ.8 ஆயிரமாக உயர்த்தப்படும். முன்னாள் படை வீரர்களுக்கு தங்கும் விடுதிகள் ரூ.22 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும், தமிழகத்தில் மலைப்பகுதிகளில் கட்டணம் இல்லா விடியல் பயணத்திட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும்.
ஓட்டுநர் பயிற்சி பெற மாநில அளவில் பயிற்சி மையம், மண்டல அளவில் இரு பயிற்சி மையங்கள் மற்றும் மாவட்டத்துக்கு ஒரு ஓட்டுநர் பயிற்சி பள்ளி ஆகியவை தொடங்கப்படும். தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவுசெய்த தொழிலாளர்களின் குழந்தைகள் 10,000 பேருக்கு ரூ.15 கோடியில் இணைய வழியில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும். இப்படி, முத்தான ஒன்பது முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு தூய்மைப்பணியாளர்கள் மேம்பாட்டுக்கான 6 அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
அதாவது, தூய்மைப்பணியாளர்களின் தொழில்சார் நோய்களை கண்டறியவும், சிகிச்சை அளிக்கவும் தனித்திட்டம், தூய்மைப் பணியாளர்கள் பணியின்போது உயிரிழந்தால், ரூ.10 லட்சம் இழப்பீடு, அவர்களின் குடும்பங்களுக்கு கூடுதலாக ரூ.5 லட்சம் காப்பீடு, தூய்மைப்பணியாளர்கள் சுயதொழில் தொடங்கும்போது அதிகபட்சமாக ரூ.3.50 லட்சம் மானியம், தூய்மைப்பணியாளர்களின் குழந்தைகளுக்காக புதிய உயர்கல்வி உதவித்தொகை திட்டம், நகர்ப்புறங்களில் சொந்த வீடு இல்லாத தூய்மைப் பணியாளர்களுக்கு 30 ஆயிரம் குடியிருப்புகள், நகர்ப்புற தூய்மைப்பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் என அதிரடியாக 6 அறிவிப்புகளை வெளியிட்டார்.
இப்படி ஒவ்வொரு சமுதாய மக்களும் தங்களது வாழ்வில் மேம்பட நாள்தோறும் புதுப்புது அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டு வருகிறார். இதுவே, மக்கள் நலன் காக்கும் `திராவிட மாடல்’ அரசு என்பதை மீண்டும் நிரூபித்து காட்டியுள்ளார். ஒன்றிய அரசின் கொள்கை மிரட்டல் ஒருபுறம், நிதி மறுப்பு நடவடிக்கை இன்னொருபுறம் என அடுத்தடுத்து மிரட்டல்கள் வந்தாலும் அஞ்சாமல் நடைபோடுகிறார் தமிழக முதல்வர்.
தனது வலுவான நிதி மேலாண்மை மூலம் தமிழகத்தில் அனைத்து துறையையும் மேம்படுத்தி வருகிறார். சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தின் ஜி.டி.பி வளர்ச்சியை இரட்டை இலக்கத்திற்கு உயர்த்தி பிடித்துள்ளார். அரசியல் எதிரிகளின் விமர்சனத்தை புறந்தள்ளி, மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு திறம்பட செயலாற்றி வரும் தமிழக முதல்வருக்கு சாமானிய மக்களின் ஏகோபித்த ஆதரவு நாள்தோறும் பெருகி வருகிறது என்பதே நிதர்சனம்.