குரூப் 2 தேர்வு மதிப்பெண், தரவரிசை வெளியீடு வரும் 28ம்தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
சென்னை: குரூப் 2 தேர்வு மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை வெளியீடு அடிப்படையில் வரும் 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 1ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிக்கை: ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள்-II தேர்வில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை விவரங்கள் கடந்த மே 5ம் தேதி தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
மேற்குறிப்பிட்டுள்ள அறிவிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 1ம் தேதி வரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எண்.3 தேர்வாணைய சாலை (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்) சென்னை 600 003ல் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான நாள், நேரம் மற்றும் இதர விவரங்கள் அடங்கிய அழைப்பாணையை தேர்வர்கள் தேர்வாணைய இணையதளமான (www.tnpsc.gov.in) லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் தேர்வர்களுக்கு அதற்கான விவரம் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும். மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான அழைப்பாணை தனியே அஞ்சல் மூலம் அனுப்பப்பட மாட்டாது.
சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் அனைவரும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டு தெரிவு செய்யப்படுவார்கள் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது. தேர்வர்கள் மேற்படி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு குறிப்பிடப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் கலந்துகொள்ள தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.