11.48 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 தேர்வு ரிசல்ட் அக்டோபரில் வெளியீடு: காலியாக உள்ள பணியிடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது
சென்னை: 11.48 லட்சம் ேபர் எழுதிய குரூப் 4 தேர்வுக்கான ரிசல்ட் அக்ேடாபர் மாதம் வெளியிடப்படும் என்று டின்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 பதவியில் காலியாக உள்ள 3935 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஏப்ரல் 25ம் தேதி வெளியிட்டது. அதில் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) 215 காலி பணியிடங்கள், இளநிலை உதவியாளர் (பிணையமற்றது) 1,621, இளநிலை வருவாய் ஆய்வாளர் 239, தட்டச்சர் 1,099, சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு 3) 368, உதவியாளர் 54, கள உதவியாளர் 19, வனக் காப்பாளர் 62, ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் 35, வனக் காவலர் 71 உள்ளிட்ட 25 வகையான பணிகளில் 3935 காலிப்பணியிடங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த பதவிக்கான எழுத்து தேர்வு கடந்த ஜூலை 12ம் தேதி நடந்தது. இத்தேர்வை 11 லட்சத்து 48 ஆயிரத்து 19 பேர் எழுதினர். இத்தேர்வு சற்று கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். அதே நேரத்தில், குரூப் 4 தேர்வுக்கான ரிசல்ட் 3 மாதத்தில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் அறிவித்து இருந்தார்.
தொடர்ந்து ஜூலை 21ம் தேதி குரூப் 4 தேர்வுக்கான உத்தேச விடைகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து ஜூலை 28ம் தேதி மாலை 5.45 மணி வரை உத்தேச விடைகளுக்கான மறுப்புகள், கருத்துக்கள் தெரிவிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்பதை டிஎன்பிஸ்சி அறிவித்துள்ளது. அதாவது அக்டோபர் மாதத்தில் குரூப் 4 முடிவுகள் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் தேர்வு எழுதி ரிசல்ட்டுக்காக காத்திருப்பவர்கள் மகிழ்ச்சிடைந்துள்ளனர். தற்போது, 3,935 பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 4 தேர்வு நடந்துள்ளது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் ரிசல்ட்டுக்கு பிறகு பணியிடங்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படலாம் என்று டிஎன்பிஎஸ்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஆண்டு குரூப் 4 தேர்வில் முதலில் 6,244 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு, பின்னர் அதிகரிக்கப்பட்டு பணியிடங்கள் எண்ணிக்கை 9,532 ஆக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.