11.48 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 பணியிட எண்ணிக்கை மேலும் 727 அதிகரிப்பு: கலந்தாய்வுக்கு முன்பாக மேலும் அதிகரிக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
சென்னை: 11.48 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 பணியிடங்களுக்கான எண்ணிக்கை மேலும் 727 அதிகரிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கு முன்பாக மேலும் அதிகரிக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதனால், தேர்வு எழுதியவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 பதவியில் காலியாக உள்ள 3,935 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஏப்ரல் 25ம் தேதி வெளியிட்டது. அதில் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) 215 காலி பணியிடங்கள், இளநிலை உதவியாளர் (பிணையமற்றது) 1,621, இளநிலை வருவாய் ஆய்வாளர் 239, தட்டச்சர் 1,099, சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு 3) 368, உதவியாளர் 54, கள உதவியாளர் 19, வனக்காப்பாளர் 62, ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் 35, வனக் காவலர் 71 உள்ளிட்ட 25 வகையான பணிகளில் 3,935 காலிப்பணியிடங்கள் இடம் பெற்றிருந்தன.
இந்த பதவிக்கான எழுத்து தேர்வு கடந்த ஜூலை 12ம் தேதி நடந்தது. இத்தேர்வை 11 லட்சத்து 48 ஆயிரத்து 19 பேர் எழுதினர். எழுத்து தேர்வை ஆய்வு செய்த டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர், ‘‘குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும்” என்று அறிவித்திருந்திருந்தார். அதன்படி குரூப் 4 தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விஏஓ பணியிடங்கள் எண்ணிக்கை 218 ஆகவும், இளநிலை உதவியாளர் பணியிடங்கள் 1969 ஆகவும், தட்டச்சர் பணியிடங்கள் 1392 ஆகவும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய (டிஎன்பிஎஸ்சி) செயலாளர் கோபால சுந்தரராஜ் வெளியிட்ட அறிவிப்பு: குரூப் 4 பணியில் கூடுதலாக 727 காலிப்பணியிடங்களுக்கான பிற்சேர்க்கை வெளியிடப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 4,662 ஆகும். குரூப் 4 பணிகள் மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளில் (வனக்காப்பாளர், மற்றும் வனக்காவலர் பதவிகள் நீங்கலாக). 2022ம் ஆண்டு அறிவிக்கையில் மூன்று நிதி ஆண்டுகளுக்கான காலிப்பணியிடங்களும், 2024ம் ஆண்டு அறிவிக்கையில், இரண்டு நிதி ஆண்டுகளுக்கான காலிப்பணியிடங்களும், ஆக மொத்தம் ஐந்து நிதியாண்டுகளுக்கு 17799 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. அதாவது, ஒரு நிதியாண்டிற்கு சராசரியாக 3560 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
2025ம் ஆண்டு குரூப் 4 பணிகள் மூலம், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளில் (வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் பதவிகள் நீங்கலாக), ஒரு நிதியாண்டிற்கு (2025-26) 4,456 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிக்கை மற்றும் பிற்சேர்க்கை வெளியிடப்பட்டுள்ளன. 2022 மற்றும் 2024 ஆண்டிற்கான அறிவிக்கைகளில் (வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் பதவிகள் நீங்கலாக) சராசரியாக ஒரு நிதியாண்டிற்கு நிரப்பப்பட்ட காலிப்பணியிடங்களுடன் (3560) ஒப்பிடும்போது, 2025ம் ஆண்டில் கூடுதலாக 896 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மேலும் 2025ம் ஆண்டு அறிவிக்கை மற்றும் பிற்சேர்க்கையில் வெளியிடப்பட்ட காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை, அரசு துறை நிறுவனங்களிடமிருந்து அதிகரித்து பெறப்படும் பட்சத்தில் கலந்தாய்விற்கு முன்பாக மேலும் அதிகரிக்கப்படும் என தெரிவித்து கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. குரூப் 4 காலி பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதால் தேர்வு எழுதியவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.