குரூப் 4 தேர்வு விடைத்தாள்கள் முறையாக சீலிடப்படாமல் அட்டைப்பெட்டிகளில் வைத்ததாக வரும் செய்திகள் ஆதாரமற்றவை: டிஎன்பிஎஸ்சி விளக்கம்
சென்னை: குரூப் 4 தேர்வு தொடர்பான விடைத்தாள்கள் முறையாக சீலிப்படாமல் அட்டைப் பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்தன என்று வரும் செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிக்கை:
குரூப் 4க்கான தேர்வுகள் கடந்த 12ம் தேதி மாநில முழுவதும் நடந்தது. தேர்வுகள் முடிந்து அனைத்து விடைத்தாள்களும் உரிய பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி சீலிடப்பட்ட இரும்பு பெட்டிகளில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்திற்கு கடந்த 13ம் தேதி காலை வரை பாதுகாப்பாக வரப்பெற்றுள்ளன. இதில் எவ்விதமான குளறுபடிகளும் நிகழவில்லை.
இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் கடந்த 12ம் தேதி முற்பகல் அன்று நடந்த ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு 4 தேர்வு தொடர்பான விடைத்தாள்கள் முறையாக சீலிடப்படாமல் அட்டைப் பெட்டிகளில் இருந்தது என பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் நேற்று செய்திகள் வந்துள்ளன. சேலம் மாவட்ட விடைத்தாள்களும் சீலிடப்பட்ட இரும்புப் பெட்டிகளில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்திற்கு கடந்த 13ம் தேதி அதிகாலை பாதுகாப்பாக வரப்பெற்றுள்ளன. விடைத்தாள்கள் அட்டைப் பெட்டிகளில் கொண்டு வரப்பட்டன என்ற செய்திகளில் உண்மை இல்லை.
ஓஎம்ஆர் விடைத்தாள்கள் அனைத்தும் இரும்புப் பெட்டிகளில் வைத்து சீலிடப்பட்டு அவை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்திற்கு வந்து சேரும் வரை 24X7 முறையில் நேரலையாக கண்காணிக்கப்பட்டு அவற்றின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டு சிசிடிவி கேமரா மூலமாகவும் கண்காணிக்கப்படுகிறது. எந்த ஒரு விடைத்தாளும் செய்தி ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டவாறு அட்டைப் பெட்டிகளில் கொண்டு வரப்படுவது இல்லை.
பத்திரிகை செய்திகளில் கொடுக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்ட காலி அட்டைப் பெட்டிகள் மற்றும் தேர்வுக்கு உபயோகப்படுத்தப்பட்ட பின்னர் உபரியாக இருந்த வினாத்தாள்கள் அடங்கிய அட்டைப் பெட்டிகள் போன்றவையாகும். இவை தேர்வில் பயன்பட்டது போக மீதமிருந்த வினாத்தாள்கள் என்பதால் வழக்கமான நடைமுறையின்படி அந்தந்த மாவட்டங்களிலேயே வைக்கப்பட்டிருக்கும்.
தேர்வு நடைமுறைகள் முடிந்த பின்னர் இவை மாவட்ட கருவூலகங்கள் மூலமாக மாவட்ட மைய நூலங்கள் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இதுகுறித்து தேர்வாணையம் ஏற்கனவே விரிவான நடைமுறையினை வெளியிட்டு பின்பற்றி வருகிறது. எனவே கடந்த 12ம் தேதி முற்பகல் அன்று நடந்து முடிந்த ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-4 தேர்வு தொடர்பான விடைத்தாள்கள் முறையாக சீலிப்படாமல் அட்டைப் பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்தன என்று வரும் பத்திரிகை மற்றும் இதர ஊடக செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றவையாகும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.