Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

4.18 லட்சம் பேர் எழுதிய குரூப் 2 பணியிட எண்ணிக்கை மேலும் 625 அதிகரிப்பு: கலந்தாய்வுக்கு முன்பாக இன்னும் அதிகரிக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: 4.18 லட்சம் பேர் எழுதிய குரூப் 2 பணியிடங்களுக்கான எண்ணிக்கை மேலும் 625 அதிகரிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கு முன்பாக மேலும் பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2, 2ஏ பதவிகளில் காலியாக உள்ள 645 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜூலை 15ம் தேதி வெளியிட்டது. குரூப் 2 பணியில் 50 இடங்கள், குரூப் 2ஏ பதவியில் 595 இடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இத்தேர்வுக்கு இளநிலை, முதுநிலை பட்டதாரிகள் என போட்டி போட்டு விண்ணப்பித்தனர். மொத்தம் 5 லட்சத்து 53 ஆயிரத்து 634 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இந்த பதவிக்கான முதல் நிலை தேர்வு கடந்த செப்டம்பர் 28ம் தேதி நடந்தது.

இதற்காக மாநிலம் முழுவதும் 1905 தேர்வு கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 4 லட்சத்து 18 ஆயிரத்து 791 பேர் மட்டும் தேர்வு எழுதினர். 1 லட்சத்து 34 ஆயிரத்து 843 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்த தேர்வுக்கான ரிசல்ட் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்து இருந்தார். மேலும் இறுதி முடிவு வெளியிடும் வரை, கவுன்சலிங் நடைபெறும் வரை பணியிடங்களை அதிகரித்துக் கொண்டே போகலாம். அதன்படி குரூப் 2 தேர்வுகளில் பணியிடங்கள் நிச்சயமாக அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தார். அதேபோல தேர்வு எழுதியவர்களும் காலி பணியிடங்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சியை வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ காலி பணியிடங்களின் எண்ணிக்கையை மேலும் 625 உயர்த்தி நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் கோபாலசுந்தரராஜ் வெளியிட்ட அறிவிப்பு: சார் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான 645 காலிப்பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 2 (குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ) பணிகளுக்கான அறிவிப்பு 15.7.2025 அன்று வெளியிடப்பட்டது. தற்போது 625 பிற்சேர்க்கை இடங்கள் இன்று (நேற்று) வெளியிடப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்களுக்கான அறிவிக்கப்பட்ட மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 1270 ஆகும். குரூப் 2 பணிகளில் (குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ) 2022ம் ஆண்டு அறிவிக்கையில் ஐந்து நிதி ஆண்டுகளுக்கான காலிப்பணியிடங்களும், 2024ம் ஆண்டு அறிவிக்கையில் இரண்டு நிதி ஆண்டுகளுக்கான காலிப்பணியிடங்களும் ஆக மொத்தம் ஏழு நிதியாண்டுகளுக்கு 8784 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதாவது, ஒரு நிதியாண்டிற்கு சராசரியாக 1254 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2025ம் ஆண்டு குரூப் 2 பணிகள் தேர்வு மூலம் ஒரு நிதியாண்டிற்கு (2025-26) 1270 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 2022 மற்றும் 2024 ஆண்டிற்கான அறிவிக்கைகளில் ஒரு நிதியாண்டிற்கு நிரப்பப்பட்ட காலிப்பணியிடங்களுடன் ஒப்பிடும்போது, 2025ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிவிக்கையின் மூலம் கூடுதலாக காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மேலும் 2025ம் ஆண்டு அறிவிக்கையில் வெளியிடப்பட்ட காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அரசுத்துறை, நிறுவனங்களிடமிருந்து அதிகரித்து பெறப்படும் பட்சத்தில் கலந்தாய்விற்கு முன்பாக மேலும் அதிகரிக்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு காலி பணியிடங்களுக்கான காலி பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் தேர்வு எழுதியவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.