Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

நாளை குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு 5.53 லட்சம் பேர் எழுதுகின்றனர்: தேர்வர்கள் காலை 9 மணிக்குள் தேர்வுக் கூடங்களுக்கு செல்ல டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தல்

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் சண்முக சுந்தரம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-2 (குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ) அடங்கிய பதவிகளுக்கான தேர்வு 28ம் தேதி (நாளை) முற்பகலில் நடக்கிறது. இத்தேர்வினை 5 லட்சத்து 53 ஆயிரத்து 634 பேர் எழுதுகின்றனர். தேர்வு தொடர்பான மந்தணப் பொருட்கள் உரிய நடவடிக்கைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

மொத்தமுள்ள 1,905 தேர்வுக் கூடங்களுக்கு முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் அறைக் கண்காணிப்பாளர்கள் (20 தேர்வர்களுக்கு ஒருவர்) நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு நடைபெறுவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தேர்வு நடைபெறும் நாளன்று தேர்வின் அனைத்து நடவடிக்கைகளும் வீடியோகிராப் செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேர்வர்கள் தேர்வுக் கூடத்தினை எளிதில் அடைவதற்கு ஏதுவாக போக்குவரத்து துறையின் மூலம் சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு அனைத்து தேர்வுக் கூடத்திற்கும் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், தேர்வு நடைபெறும் நாளன்று தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு மின்வாரிய துறைக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

தேர்வர்களின் உடல் நலன் கருதி உரிய மருத்துவ உதவிகள் வழங்க சுகாதாரத்துறைக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு உரிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தேர்வு நடைபெறும் நாளன்று அதாவது, 28ம் தேதி (நாளை) முற்பகல் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட தேர்வு கூடத்திற்கு தேர்வர்களுக்கான நுழைவுச்சீட்டில் குறிப்பிட்டுள்ளவாறு காலை 9 மணிக்கு முன்னரே செல்ல வேண்டும்.

காலை 9 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் தேர்வுக் கூடத்தில் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் இந்த தேர்விற்குரிய தேர்வுக்கூட அனுமதி சீட்டினை கட்டாயம் தேர்வுக்கூடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். மேலும், தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில் உள்ள முக்கிய அறிவுரைகள் மற்றும் தேர்வாணைய இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள், வினாத்தாள் மற்றும் விடைத்தாளில் குறிப்பிட்டுள்ள அனைத்து அறிவுரைகளையும் முறையாக பின்பற்ற வேண்டும்.

அதில் குறிப்பிட்டுள்ள தடை செய்யப்பட்ட மின்னணுச் சாதனங்கள் மற்றும் வேறு வகையான எந்த ஒரு சாதனத்தையும் எடுத்துச் செல்லக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. குரூப் 2, குரூப் 2ஏ பதவியில் காலியாக உள்ள 645 பதவிகளை நிரப்புவதற்காக இந்த தேர்வு நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.