துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட குரூப் 1 முதன்மை தேர்வு முடிந்தது: மார்ச்சில் ரிசல்ட் வெளியிட டிஎன்பிஎஸ்சி திட்டம்
சென்னை: துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட குரூப் 1 பதவிக்கான மெயின் தேர்வு நேற்றுடன் முடிந்தது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 78 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஏப்ரல் 1ம் தேதி வெளியிட்டது. இதில், துணை கலெக்டர் 28 இடங்கள், போலீஸ் டிஎஸ்பி 7 இடம், வணிகவரி உதவி ஆணையர் 19, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் 15, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி 3, தொழிலாளர் நல உதவி ஆணையர் 6 ஆகிய பணியிடங்கள் அடங்கும். அதோடு உதவி வனப் பாதுகாவலர் 2 காலியிடங்களுக்கான குருப் 1 ஏ அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
இத்தேர்வுக்கான முதல்நிலை தேர்வு கடந்த ஜூன் மாதம் 15ம் தேதி நடந்தது. இத்தேர்வை 1 லட்சத்து 86 ஆயிரம் 128 பேர் எழுதினர். தொடர்ந்து ஆகஸ்ட் 28ம் தேதி ரிசல்ட் வெளியிடப்பட்டது. இதில், தற்காலிகமாக 1801 பேர் மெயின் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இந்த தேர்வு கடந்த 1ம் தேதி தொடங்கியது. முதல் நாள் அன்று தமிழ் தகுதி தேர்வு நடந்தது. தொடர்ந்து 2ம் தேதி 2ம் தாள் தேர்வு(பொது அறிவு 1), 3ம் தேதி 3ம் தாள் தேர்வு (பொது அறிவு 2) நடந்தது.
இறுதி நாளான நேற்று 4ம் தாள் தேர்வு(பொது அறிவு 3) நடந்தது. மெயின் தேர்வு சென்னையில் மட்டும் நடந்தது. சென்னையில் கே.கே.நகர் அரசு மேல்நிலைப்பள்ளி, திருவல்லிக்கேணி என்கேடி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவல்லிக்கேணி தி முஸ்லிம் அரசு மேல்நிலைப்பள்ளி, தி.நகர் கர்நாடக சங்கீதா மேல்நிலைப்பள்ளி, வேப்பேரி பென்டிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட சென்னையில் 18 இடங்களில் தேர்வு நடந்தது. குரூப் 1 ஏ பதவிக்கான மெயின் தேர்வு கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. வருகிற 8, 9, 10ம் தேதிகளில் தொடர்ச்சியாக தேர்வுகள் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

