வழக்கறிஞர்களுக்கான குழு விபத்து காப்பீடு திட்டம்; நவம்பர் 10ம் தேதிக்குள் பிரிமியம் செலுத்த வேண்டும்
சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள வழக்கறிஞர்களுக்கான புதிய விபத்து காப்பீட்டு பிரிமியம் தொகையை வரும் நவம்பர் 10ம் தேதிக்குள் செலுத்துமாறு தமிழ்நாடு புதுவை பார் கவுன்சில் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், வழக்கறிஞர்களுக்கான புதிய 999 குழு விபத்து காப்பீட்டுத் திட்டம் கடந்த 11ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன் உள்ளிட்டோர் சமீபத்தில் தொடங்கிவைத்தனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், நேஷனல் காப்பீடு நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தும் இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 999 ரூபாய் செலுத்தினால் 10 லட்சம் ரூபாய் வரை விபத்து காப்பீடு பெற முடியும். மருத்துவ சிகிச்சை பெற 3 லட்சம் ரூபாய், சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வு எடுக்கும்போது 50 வாரங்களுக்கு 6,000 ஆயிரம் வரை வழங்கும் வகையிலான இந்த கூட்டு காப்பீட்டு திட்டத்தில் சேர பார் கவுன்சில் இணையதளம் வாயிலாக வழக்கறிஞர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
இது குறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் 13ம் தேதி முதல் கூட்டு காப்பீட்டு திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. அக்டோபர் 13 முதல் அடுத்தாண்டு அக்டோபர் 12 வரையிலான ஓராண்டுக்கு, இத்திட்டம் நடைமுறையில் இருக்கும். இதற்கான பிரிமியம் தொகையை வரும் நவம்பர் 10ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.